அரியலூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட 3 புதிய நியாய விலைக் கடைகள் திறப்பு

அரியலூர் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 38. 21 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3 நியாய விலைக் கடைகளை அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா நேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அரியலூர் சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட தாமரைக்குளம், ஓட்டக் கோவில், விழுப்பணங்குறிச்சி உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 38. 21 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3 நியாய விலைக் கடைகளை சிறப்பு அழைப்பாளராக அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா கலந்து கொண்டு புதிய நியாய விலைக் கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, தொடர்ந்து குத்து விளக்கேற்றி, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட் களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

இந்த விழாவிற்கு கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளர் (பொது விநியோக திட்டம்) சாய் நந்தினி முன்னிலை வகித்தார்.முன்னதாக திறப்பு விழாக்களில் கலந்து கொண்ட அனைவரையும் அரியலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களின் மேலாளர் சக்திவேல் வரவேற்றார்.

இந்த விழாவில் மதிமுக மாவட்ட செயலாளர் க. இராமநாதன், வட்ட வழங்கல் அலுவலர் எம்.எஸ். ஐயப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொய்யா மொழி, குருநாதன், அரியலூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் கோ. அறிவழகன், மதிமுக ஒன்றிய செயலாளர்கள் பி. சங்கர், ரமேஷ் பாபு, கூட்டுறவு சார்பதிவாளர்கள் சசிகுமார், சுரேஷ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாப்பாள் கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.