பெண் துணைக் காவல் கண்காணிப்பாளர் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்குதல்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இன்று சாலை மறியலை தடுக்க முயன்ற பெண் துணைக் காவல் கண்காணிப்பாளரின் தலை முடியைப் பிடித்து இழுத்து சிலர் தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து காவல் கண்காணிப்பாளர் கண்ணன் நேரடி விசாரணை நடத்தினார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள்தேவன்பட்டியைச் சேர்ந்த மினி லார் ஓட்டுநர் காளிகுமார் நேற்று தனது மினி லாரியில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் குழாய் பதிப்பதற்கான உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு திருச்சுழி நோக்கி வந்து கொண்டிருந்தார். திருச்சுழி – ராமேஸ்வரம் சாலையில் கேத்தநாயக்கன்பட்டி விலக்கு அருகே வந்தபோது, 2 பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் 5 பேர் மினி லாரியை நிறுத்தி காளிகுமாரை சரமாரியாத் தாக்கி அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். இதையடுத்து காளிகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக, காளீஸ்வரன், அருண்குமார், லட்சுமணன், பாலமுருகன், வீரசூரன், வேல்முருகன் ஆகிய 6 பேர் மீது திருச்சுழி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் காளிகுமாரின் உடல் செவ்வாய்க்கிழமை பிரேத பரிசோதனை செய்யப்படவிருந்த நிலையில், அவரது உறவினர்கள் ஏராளமானோர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் இன்று காலை குவிந்தனர். கொலையாளிகளை உடனே கைது செய்யக்கோரி அவர்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

அப்போது அவர்களை அருப்புக்கோட்டை துணைக் காவல் கண்காணிப்பாளர் காயத்ரி தலைமையிலான காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த சிலர் துணைக் காவல் கண்காணிப்பாளர் காயத்ரியை தள்ளிவிட்டு, அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்து தாக்கினர். இதனால், காவல்துறையினரும் மறியலில் ஈடுபட முயன்றவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரை கண்டித்து திருச்சுழி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த காவல் கண்காணிப்பாளர் கண்ணன் சம்பவ இடத்துக்கு வந்து நேரடி விசாரணை நடத்தினார். துணைக் காவல் கண்காணிப்பாளர் தாக்கப்பட்டது தொடர்பாக குமார், பொன்குமார் உள்ளிட்ட 4 பேரை பிடித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், துணைக் காவல் கண்காணிப்பாளர் காயத்ரி மீது தாக்குதல் நடத்திய ராமநாதபுரம் அருகே உள்ள நெல்லிகுளத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரை கைது செய்தனர். மேலும், மினி லாரி ஓட்டுநர் காளிகுமார் கொலை வழக்கில் காளீஸ்வரன், அருண்குமார், லட்சுமணன், பாலமுருகன் ஆகியோரையும் காவல்துறை இன்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள வீரசூரன், வேல்முருகன் ஆகிய இருவரையும் காவல்துறை தேடி வருகின்றனர்.