தமிழ் பரப்புரை கழக திட்டத்தில் தமிழ் கற்பிக்கும் தன்னார்வலர்கள், ஆசிரியர் பயிற்சிக்கு பதிவு செய்வதற்கான இணையதளம், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் ஒருங்கிணைந்த இணையதளம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அயலக மாணவர்களின் தமிழ்கற்றல், கற்பித்தலுக்காக தமிழ் பரப்புரை கழகத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2022 செப்டம்பரில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் பணிகளை தமிழ் இணைய கல்விக் கழகம் செயல்படுத்தி வருகிறது.
இதில் 34 நாடுகள், 16 இந்திய மாநிலங்களில் தமிழ் இணைய கல்வி கழகத்தின் 160 தொடர்பு மையங்கள் மூலம் திறன்கள் அடிப்படையிலான பாடப் புத்தகங்கள், கற்றல் துணை கருவிகள், கட்டணமில்லா இணையவழி வகுப்புகள் உள்ளிட்ட பல வசதிகள் வழங்கப்படுகின்றன. இந்த மையங்களில் மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் தமிழ் பயிற்றுவிக்கின்றனர்.
இந்த சூழலில், அயலக தமிழ்ச்சங்கங்கள், பள்ளிகளின் கோரிக்கை அடிப்படையில், கற்பித்தலை மேம்படுத்தும் நோக்கில், தன்னார்வலர்களுக்கு இணையவழியில் ஓராண்டு ஆசிரியர் பட்டயப் பயிற்சி வழங்க தமிழ் பரப்புரை கழகம் திட்டமிட்டது. இப்பயிற்சியை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்க கடந்த ஜனவரியில் அயலக தமிழர் தின விழாவில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்நிலையில், இப்பயிற்சியில் சேர பதிவு செய்வதற்கான http://tva.reg.payil.app/ என்ற இணையதளத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பட்டயப் பயிற்சி குறித்த குறிப்பேட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெற்றுக் கொண்டார்.