திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்காரப்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது நண்பரின் வீட்டில் தங்கி வாடகை கார் ஓட்டி வருகிறார். இந்நிலையில், ராஜ்குமாரின் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிக் கணக்கில் வெறும் 15 ரூபாய் இருந்த நிலையில் கடந்த 9-ம் தேதியன்று திடீரென்று 9000 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டது.
ராஜ்குமார் செல்போனுக்கு திடீரென 9000 கோடி ரூபாய் தனது அக்கவுண்டில் டெபாசிட் ஆனதாக குறுஞ்செய்தி வரவே, நண்பர்கள் யாரோ விளையாட்டாக அனுப்பியிருக்கலாம் அல்லது ஏதாவது எஸ்.எம்.எஸ் தவறுதலாக வந்திருக்கலாம் என நினைத்துள்ளார். பிறகு எதற்கும் பரிசோதித்துப் பார்க்கலாம் என நினைத்த ராஜ்குமார், தனது வங்கிக் கணக்கில் இருந்து 21,000 ரூபாயை நண்பருக்கு அனுப்பியுள்ளார். அந்த பணம் நண்பருக்கு சென்றதையடுத்து தனது வங்கிக் கணக்கில் பணம் இருப்பதை அவர் உறுதி செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி கிளையிலிருந்து ராஜ்குமாரை தொடர்பு கொண்டுள்ளனர். ராஜ்குமாரின் வங்கி கணக்குக்கு தவறுதலாக பணத்தை அனுப்பி விட்டதாகவும், அதனைப் பெற்றுக் கொள்வதாகவும் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் உதவியுடன் வங்கி மற்றும் ராஜ்குமார் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அப்போது வங்கி தரப்பில் தவறுதலாக பணம் அக்கவுண்ட் மாறி வந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் இருந்து மற்றொரு வங்கி கணக்குக்கு இந்த தொகையை அனுப்பும் பணியில் வங்கி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அப்போது, தவறுதலாக ராஜ்குமாரின் வங்கி கணக்கில் 9000 கோடியை செலுத்தியதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், ராஜ்குமார் நண்பருக்கு அனுப்பி செலவழித்த 21,000 ரூபாயை திரும்பத் தர வேண்டாம் என்றும், அவருக்கு கார் வாங்க கடன் வழங்குவதாகவும் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் ஓட்டுநரின் வங்கிக் கணக்கில் தவறுதலாக 9000 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டு, மீண்டும் அந்த தொகையை வங்கி நிர்வாகம் பெற்றுக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தவறுதலாக ரூ.9000 கோடி தனது அக்கவுண்டில் டெபாசிட் ஆனது தொடர்பாக தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி மீது சைபர் கிரைமில் அக்கவுண்டை வங்கி நிர்வாகம் தவறாகப் பயன்படுத்தியதாகவும், தனக்கு உரிய விளக்கம் அளிக்கவில்லை என்று புகார் ராஜ்குமார் அளித்துள்ளார்.