நாட்டில் அரசியல் தலைவர்கள் கொடுக்கும் செய்திகளை அப்படியே வெளியிட வேண்டும், அவர்களின் குறைகளை தட்டி கேட்காமல் அவர்களுக்கு ஜால்ரா போடும் கேள்விகளை கேட்க வேண்டும் என்ற மன வியாதியில் ஒரு சில தலைவர்கள் நாட்டில் உலவி கொண்டுள்ளனர். குறிப்பாக பாஜக தலைவர்கள் H. ராஜா அண்ணாமலை மற்றும் நாம் தமிழர் கட்சி சீமான் போன்றோர் பத்திரிகையாளர்களை தொடர்ந்து அவமதித்து வருகின்றனர்.
அதன்வரிசையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, என்னுடன் கூடுகிற கூட்டம் இரண்டு கட்சியும் வேண்டாம் என வெறுத்துப் போய் கூடுகிற கூட்டம். என்னுடைய செல்வாக்கு என்பதே திராவிட கட்சிகளை ஒழிக்கனும்னு நினைக்கிற மக்கள்தான். 60 ஆண்டுகளாக ஆண்டு மக்களை இந்த நிலைக்கு தள்ளிட்டாங்களேன்னு வெறுக்கிற மக்கள்தான் என் பின்னாடி திரளுகிறார்கள் சீமான் என்றார்.
அப்போது குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர், அப்ப தொகுதிக்கு 3,000 ஓட்டு மட்டும் வாங்கினா போதுமா சார் என கேள்வி கேட்டார். இதனையடுத்து சட்டென கோபமடைந்த சீமான், ஒரு தொகுதிக்கு 26,000 ஓட்டு வாங்கி இருக்கேன்.. நீங்க தூக்குல தொங்குறீங்களா? விஷம் குடிக்கிறீங்களா? 37,000 ஓட்டு வாங்கியிருக்கேன் தூத்துக்குடியில்..அப்புறம்… என தலையை தூக்கி கையை உயர்த்தி சொடக்குப் போட்டபடி, 3,000 ஓட்டு எந்த தொகுதியில் வாங்கினேன்னு சொல்லுங்க.. நான் தீக்குளிக்கிறேன்.. என்றார். அத்துடன் கையை நீட்டி மிரட்டும் தொனியில் தம்பி.. தம்பி.. ஏய்.. என சொல்ல அப்போதும் செய்தியாளர் குறுக்கிட, இதெல்லாம் பேசக் கூடாது என சீமான் எச்சரித்தார்.
தொடர்ந்து, திராவிட கட்சிகள் காசு கொடுக்கிறாங்களா இல்லையா? என செய்தியாளரிடம் சீமான் கேள்வி கேட்க, நான் இதுவரை பார்த்தது இல்லை என பட்டென அந்த செய்தியாளர் பதில் சொன்னார். உடனே வேறு வேலையை பாருங்க என்ற சீமான், அந்த செய்தியாளரை அழைத்து நீங்க எந்த இதழில் வேலை செய்றீங்க என்றார். அவர் தாம் பணிபுரியும் பத்திரிகையின் பெயரை சொன்ன உடனே, அந்த பத்திரிகை அவ்வளவு கேவலமாக போய்விட்டது என்றார். பின்பு, உங்க பெயர் என்ன என சீமான் கேள்வி கேட்க, சிராஜூதீன் என்றார் அந்த செய்தியாளர். உடனே, அப்ப நீ பேசுவ? என மீண்டும் சீண்ட இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.
இந்த அடாவடி அடங்கும் முன்னே தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எல்லோருக்குமே தமிழ்நாடு பாஜக மீது கோபம்தானே. பாஜகவுக்கு ஒரே ஒரு தேர்தல் தேவைப்படுகிறது. 25% வாக்கு வங்கியை பாஜக காட்டிவிட்டால் தமிழ்நாட்டின் அரசியல் தலைகீழாக மாறும். தமிழ்நாட்டில் மேல்மட்டத்தில் என்ன கருத்து வைக்கிறார்களோ அதற்கு நேர் எதிரான நிலைபாட்டை எடுப்போம். இந்தியாவில் பாஜகதான் தூய்மையான கட்சி. எனவே அதன் மீது வெறுப்பு இருக்கத்தானே செய்யும்” என்றார்.
அப்போதுதான் பெண் பத்திரிகையாளர், பாஜக மாநில தலைவராக இல்லாமல் கட்சியில் தொடர்வீர்களா என்று கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த அண்ணாமலை, “நீங்க வாங்க சிஸ்டர்.. இங்க வாங்க. பக்கத்துல வாங்க. கேள்வி கேட்பதற்கு ஒரு மரபு இருக்கிறது. இதுபோல் கேள்வி கேட்பவர்களை தமிழ்நாடு மக்கள் பார்க்க வேண்டும்.” என்றார். அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு சக பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அவர், “நான் சொல்வதை கவனியுங்கள். நீங்கள் தமிழ்நாடு பாஜக கட்சி தலைவராக இல்லாவிட்டால் பாஜகவில் தொடர்வீர்களா? என்று கேட்கிறார்.
இந்த மாதிரி அறிவாளித்தனமாக கேள்வி கேட்பது யார் என்று எல்லோரும் பார்க்க வேண்டும். நான் சொல்வது என்ன தவறு. அண்ணே.. கேள்விக்கு ஒரு மரபு இருக்கிறது. அந்த மரபை தாண்டினால் அண்ணாமலை யாராக இருந்தாலும் விட மாட்டான். நான் என்ன இந்த சீட்டை பசை போட்டுள்ளேனா. தயவு செய்து வாங்க சிஸ்டர்.” என்று அவர் அழைத்தவுடன் மீண்டும் செய்தியாளர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர்.
அண்ணாமலை பாஜகவின் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டது தொடங்கியே கட்சியின் மூத்த தலைவர்களையும், கூட்டணி கட்சித் தலைவர்களையும் மதிக்காமல் செயல்படுகிறார், அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் போன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை அளந்துவிட்ட பொய், அதிமுகவை கோபப்படுத்தியதும், அதைத் தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியதையும் நாம் அறிவோம்.
ஆகவே, அண்ணாமலையின் இந்த நடவடிக்கையால், அவர் மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்படலாம் என்ற செய்தி அரசியல் வட்டாரத்தில் உலாவரத் தொடங்கியுள்ளது. ஆகவே, அண்ணாமலையை பொறுத்தவரை, பத்திரிகையாளர்கள் எழுப்பும் நியாயமான கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் வசமாக சிக்கிக்கொள்ளும் பட்சத்தில் அதை எவ்வாறு சமாளிப்பது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல், கேள்வி கேட்ட பத்திரிகையாளரை நோக்கி “நீங்கள் எந்த பத்திரிகையை சேர்ந்தவர்? உங்கள் பெயர் என்ன? உங்களுக்கு கேள்வி கேட்க தெரியவில்லை” என்பது போன்ற தரம்கெட்ட செயலில் ஈடுபட்டு தப்பிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
தமிழ்நாடு அரசியல் களம் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை பார்த்துள்ளது. ஆனால், பத்திரிகையாளர்கள் எழுப்பும் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல், மூன்றாம் தர நடவடிக்கையில் ஈடுபட்ட எந்த ஒரு தலைவரையும் தமிழ்நாடு இதற்கு முன் சந்தித்ததில்லை. ஆகையால், “பெண் பத்திரிகையாளரிடம் கீழ்த்தரமாக நடந்துகொண்ட அண்ணாமலை மற்றும் கும்பகோணத்தில் சீமான் செய்தியாளர்களுடன் நடந்து கொண்டதை இந்தியா ஃபஸ்ட் மாத இதழ் வன்மையாக கண்டிக்கிறது. ஊடக நிறுவனங்கள் தங்களின் TRP -க்காக அண்ணாமலை மற்றும் சீமான் செய்திகளை வெளியிடுவது மற்றும் செய்தியாளர் சந்திப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்று இந்தியா ஃபஸ்ட் மாத இதழ் வலியுறுத்துகிறது.