வானதி சீனிவாசன் சூளுரை: தமிழகமும் ஒரு நாள் நமது கைக்கு வரும்..!

கோயம்புத்தூர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த 58 பேருக்கு 27 -ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில், தமிழகம் ஒருநாள் நம் கைக்கு வரும் என கோயம்புத்தூர் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த 58 பேருக்கு 27 ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி ஆர்எஸ் புரம் தபால் நிலையம் அருகே நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் பங்கேற்று பேசினார். அப்போது, 27 -வது ஆண்டு அஞ்சலி கூட்டத்திற்காக இங்கு சேர்ந்துள்ளோம். 27 ஆண்டுகளாக எதற்கு திரும்ப திரும்ப மக்களுக்கு இதை கூற வேண்டியது ஏன் என கேட்கின்றனர். நமது சமூகத்தை பிளக்க நினைக்கும் வரலாறை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. இந்த கொடுஞ்செயல் மக்களுக்கு இன்னமும் ஆழமாக இருக்கின்றது. கோயம்புத்தூரின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.

இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் பாஜகவினர், இந்துத்துவா அமைப்பினர் அல்ல. மத பயங்கரவாதத்திற்கு அதிக இழப்புகளை அடைந்த கட்சி பாஜக இந்து கலாச்சாரத்திற்கு தர்மத்திற்கு பாதிப்பு வந்தால் அதை காக்க நாங்கள் இருக்கின்றோம். இதை ஒவ்வொரு தலைமுறைக்கும் எடுத்துக் செல்லாமல் இருக்க மாட்டோம்.

பொங்கல் வைக்காத இஸ்லாமியர், கிறிஸ்தவர்களை வைத்து ஏமாற்றும் முதல்வர் இங்கு இருக்கின்றார். தமிழகத்தில் பெரும்பான்மை மக்கள் கொண்டாடும் விழாக்களுக்கு வாழ்த்து சொல்லாதவர் முதல்வர். இந்து கோவில்களுக்கும் வழிபாட்டிற்கும் ஏதாவது பிரச்சினை வந்தால் எந்த அரசியல் கட்சியும் வாயை திறப்பதில்லை. பாஜக பிரிவினை வாதத்தினை தூண்டுகின்றது என்கின்றனர். இதை வெளிநாடுகளில் யாரும் நம்ப மாட்டார்கள். நாட்டை பிரிப்பார்கள், மத கலவரம் செய்ய போகின்றனர் என பேசுகின்றனர். அரசியலில் வெற்றி பெற மத வாதத்திற்காக கையில் எடுப்பதாக சொல்கின்றனர்.

பாஜக பிரிவினைவாதம் செய்கின்றது என பேசும் கட்சிகள் எனது தொகுதிக்கு வாருங்கள். ஒரு சட்டமன்ற உறுப்பினரால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை காட்டுகின்றோம். சிறுபான்மை மக்களுக்கு எந்த வேறுபாடு, மாறுபாடு காட்டுவதில்லை. பாஜக மத கலவரத்திற்காக அல்ல. தமிழகமும் ஒரு நாள் நமது கைக்கு வரும். அதுவரை தொடர்ந்து உழைப்போம் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் கல்வி உதவித் தொகைக்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வு..!

கல்வி உதவித்தொகைக்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வு டிசம்பர் 14-ஆம் தேதி நடைபெறுகிறது. மாணவர்கள் நவம்பர் 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் ந.லதா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் (சென்னை தவிர்த்து) அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: “தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வு தேர்வு திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த திறனாய்வு தேர்வெழுத தகுதி பெற்றவர்களாவர்.

இந்த திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.1000 வீதம் 4 வருடங்கள் வழங்கப்படும். இந்த தேர்வை ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எழுதலாம். அவர்களது பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

அந்தவகையில் நடப்பாண்டுக்கான ஊரக திறனாய்வு தேர்வு டிசம்பர் 14-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்வெழுத விரும்பும் மாணவர்களின் தங்கள் பள்ளி தலைமையாசிரியர்கள் வாயிலாக நவம்பர் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.10 செலுத்த வேண்டும். மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை தலைமையாசிரியர்கள் தேர்வுத் துறை இணையதளத்தில் நவம்பர் 14 முதல் 22-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன்பின் மாணவர்களின் விண்ணப்பங்கள் மற்றும் தொகுப்பறிக்கையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் சமர்பிக்க வேண்டும்.

இதுதவிர விண்ணப்பித்த மாணவ, மாணவிகளின் பள்ளி அமைந்துள்ள ஒன்றியத்திலேயே தேர்வு மையம் அமைக்கப்பட வேண்டும். மேலும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்” என சுற்றறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாவை ஸ்டிக்கராக மட்டும் பார்க்கும் அதிமுக..!

கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் பற்றி திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ”அண்ணாவைத் தங்கள் கட்சிக்கு ஒட்டும் லேபிளாக, கொடியில் ஒரு ஸ்டிக்கராக வைத்துக் கொண்டு, அவரது கொள்கைகளுக்கு முற்றிலும் எதிராகச் செயல்பட்டு வருபவர்கள் யார் என்பது உடன்பிறப்புகளான உங்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றாகவே தெரியும்.’

”அவர்கள் அண்ணாவுக்குப் பெருமை சேர்க்கவில்லை என்பது மட்டுமல்ல, தங்கள் கட்சியை உருவாக்கிய தலைவரின் நூற்றாண்டைக் கூட மறந்துபோய், ஓராண்டு கழித்து திடீரென நினைவுக்கு வந்து, பெயரளவுக்குச் சில நிகழ்ச்சிகளை நடத்திவிட்டு, கழக ஆட்சியில் கட்டப்பட்ட இடங்களுக்கு எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரை வைத்து அவரது நூற்றாண்டை முடித்துவிட்டார்கள்.”

”அவர்கள் இயக்கத்தில் மூத்த தலைவராக வாழ்ந்து மறைந்த நாவலர் அவர்களின் நூற்றாண்டைக் கொண்டாடியது தி.மு.கழகம்தான். நாவலருக்குச் சிலை அமைத்ததும் கழக அரசுதான்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி, கலைஞர் நூற்றாண்டை, அவரைப் போலவே மக்களுக்குப் பயனுள்ள திட்டங்களாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.”

”’ஏ, தாழ்ந்த தமிழகமே!’ என வேதனையோடு பேரறிஞர் அண்ணா சொன்ன காலம் ஒன்று உண்டு. திராவிட இயக்கத்தின் கொள்கை வலிமையால், அதன் அர்ப்பணிப்பு மிகுந்த செயல்பாடுகளால், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மக்கள் அளித்த வெற்றியால், கலைஞரின் ஆட்சித் திறனால், அன்று தாழ்ந்திருந்த தமிழகம் இன்று தலைநிமிர்ந்த தமிழ்நாடாக, இந்தியாவின் முன்னோடி மாநிலமாகத் திகழ்வதுபோல, மாமதுரையில் திறக்கப்படவிருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு அறிவுச் செல்வத்தை வாரி வாரி வழங்கி, தமிழர்களின் வாழ்வை உயர்த்தும்.”

ஒன்றரை வயதே பிஞ்சுக் குழந்தையின் கை அகற்றத்திற்கு யார் காரணம்..?

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர் – அஜிஸா தம்பதியரின் ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு கடந்த ஓராண்டாக தலையில் ரத்தக்கசிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்ற போதிலும் சரி ஆகாததால் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தங்கள் குழந்தையை அவர்கள் அனுமதித்துள்ளனர்.

இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு குழந்தைக்கு மருந்து ஏற்றுவதற்காக கையில் டிரிப்ஸ் போடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, குழந்தையின் வலது கை அழுகத் தொடங்கியது. தவறான டிரிப்ஸ் போட்டதே இதற்கு காரணம் என குழந்தையின் பெற்றோர்கள் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக குழந்தையின் பெற்றோர்கள் மருத்துவமனை வாசலில் போராட்டம் நடத்தினர். இதனால் இந்த விவகாரம் பூதாகரமாகியது.

இதையடுத்து, அந்தக் குழந்தை எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அந்தக் குழந்தையின் அழுகிய கையை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சுமார் 2 மணிநேர அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் கை அகற்றப்பட்டது. ஒன்றரை வயதே பிஞ்சுக் குழந்தையின் கை அகற்றப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.