சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட மோதலில் விரோதியை சிக்கவைக்க போட்ட வலை..! விசாரைணையில் தானே மாட்டிய கொடூரம்…!

தஞ்சாவூர் மாவட்டம் தம்பிக்கோட்டை பகுதியை சேர்ந்த இளவரசன் என்பவர் பெயரில் கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை குண்டு வைத்து தகர்க்கப்போவதாகவும், காவல் கண்காணிப்பாளரை அவரது அலுவலகத்தின் உள்ளேயே புகுந்து சுட்டுவிடுவதாகவும் கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு கடிதம் ஒன்று வந்தது.

இந்த கடிதலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி காவல்துறையினர் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சென்று இளவரசன் என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் தான் இதுபோன்ற கடிதம் ஏதும் அனுப்பவில்லை என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து விசாரணை செய்ததில் அதே கிராமத்தை சேர்ந்த கோடீஸ்வரன் என்பவரை இளவரசன் என்பவர் சமூக வலைத்தளத்தில் தரக்குறைவாக பதிவு செய்ததாகவும், அதனால் ஏற்பட்ட முன்விரோதத்தால் அவரை காவல்துறையில் சிக்க வைக்க இளவரசன் பெயரில் போலியான கடிதத்தை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கோடீஸ்வரன் அனுப்பியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கோடீஸ்வரனை காவல்துறையினர் கைது செய்தனர்.

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆயுதப்படை காவலர் கைது..!

திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வரும் 22 வயதான பெண் காவலர் ஒருவர், பணி நிமித்தமாக கடந்த 18-ம் தேதி, தஞ்சாவூர் சென்றுவிட்டு மீண்டும் திருவாரூருக்கு பேருந்தில் சென்றார். அப்போது அதே ஆயுதப்படை பிரிவில் எழுத்தராக பணிபுரிந்து வரும் காவலர் சற்குணம் என்பவர் வழியில் கொரடாச்சேரி என்ற இடத்தில் இறங்கி தனது பைக்கில் திருவாரூர் நோக்கி அழைத்து சென்றார். அப்போது அந்த பெண் காவலரிடம் சற்குணம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவலர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட எஸ்பி சுரேஷ்குமார், ஆயுதப்படை காவலர் சற்குணத்தை கடந்த 20-ம் தேதி அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் பெண் காவலர் புகார் தொடர்பாக, திருவாரூர் தாலுகா காவல்துறை வழக்குப்பதிவு செய்து ஆயுதப்படை காவலர் சற்குணத்தை நேற்று கைது செய்தனர்.

கொரோனா காலகட்டத்தில் கிருமி நாசினி வாங்கியதில் முறைகேடு: மாநகராட்சி ஆணையர் வீட்டில் ரெய்டு!

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வரும் மகேஸ்வரி, இதற்கு முன் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாநகராட்சிகளில் ஆணையராக பணியாற்றிய இவர் கடந்த ஏப்ரல் மாதம் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகேஸ்வரி கடந்த 2020 முதல் 2021 வரை அதாவது கொரோனா காலகட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக் பணிபுரிந்து வந்தார். அப்போது கொரோனா தடுப்பு பணிகளுக்காக லைசால் கிருமிநாசினி கொள்முதல் செய்துள்ளார். அதில், முறைகேடு நடந்ததாகக் கூறி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுடர்மணி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணை நடத்தினர்.

இதில், லைசால் கிருமிநாசினி கொள்முதல் செய்ததில் 32 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து 22.06.23 காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் மகேஸ்வரி பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு கடந்த மூன்று மாதமாக திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், 23.06.23 காலை திண்டுக்கல் ஆர்.எம்.காலனி பகுதியில் வசித்து வரும் மகேஸ்வரியின் வீட்டில், டி.எஸ்.பி நாகராஜன் தலைமையிலான 6 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை ஈடுபட்டனர். அதேபோல் திருப்பூரில் உள்ள மகேஸ்வரியின் வீடு. காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணியாற்றிய துப்புரவு ஆய்வாளர்கள் வீடு என மொத்தம் 5 இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க ரூ.6 கோடி லஞ்சம்: காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் தெருவைச் சேர்ந்த எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர். சுவாமிநாதன் சகோதரர்களான இருவரும் கிரிஷ் பால் பண்ணை மற்றும் நிதி நிறுவனம் உள்ளிட்ட தொழில்களைச் செய்து வருகின்றனர்.

இவர்கள் தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், இரட்டிப்பாகப் பணம் திருப்பித் தரப்படும் என ஆசைவார்த்தை கூறி வணிகர்கள், தொழிலதிபர்கள் , பொதுமக்கள் எனப் பலரையும் குறிவைத்து நிதி வசூல் செய்தனர். ஆரம்பத்தில் சொன்னதுபோலவே பணத்தைத் திருப்பித் தந்ததால், பலரும் தாமாக முன்வந்து அவர்களின் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர். அதன்விளைவு சொந்த ஹெலிகாப்டரில் வலம் வரும் அளவிற்கு அபார வளர்ச்சி அடைந்து, ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’ என அழைக்கப்பட்டும் அளவிற்கு மாறினார்.

ஹெலிகாப்டர் பிரதர்ஸின், சாயம் போகப்போக வெளுக்க ஆரம்பித்தது, கும்பகோணத்தைச் சேர்ந்த ஜபருல்லா-பைரோஜ் பானு தம்பதியினர் மற்றும் கணேஷ், சுவாமிநாதன் சகோதரர்கள் எங்களிடம் 15 கோடி மோசடி ரூபாய் செய்துவிட்டதாக, கடந்த 2021-ம் ஆண்டு, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் மீது குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கணேஷ், சுவாமிநாதன் உட்பட 5 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில், கணேஷ் தாயாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சூழலில், கணேஷ் அங்கு தனியார் லாடஜ் ஒன்றில் தங்கியிருந்தார். அப்போது, பூதலுார் ஆய்வாளராக இருந்த கண்ணன், கடந்த 2021ம் ஆண்டு ஏப்.17 ம் தேதி, லாட்ஜ்க்கு சென்று கணேஷிடம், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ரகு பிராசத் மற்றும் சீனிவாசன் என்பவர்களுக்கு 2 கோடியே 38 லட்சம் பணம் மோசடி செய்துவிட்டதாக புகார் அளித்துள்ளனர். அதுதொடர்பாக விசாரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

பிறகு மறுநாள் அப்போது சிறப்புப் பிரிவு ஆய்வாளராக இருந்த சோமசுந்தரம், கண்ணன் இருவரும் மீண்டும், கணேஷை லாட்ஜில் சந்தித்து, இரண்டு புகார்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யாமல் இருக்கவும், மேலும் மோசடி வழக்கில் விசாரணை நடத்தாமல் இருக்கவும் 6 கோடி ரூபாய் பணம் தர வேண்டும் எனக் கேட்டுள்ளனர். அத்துடன் முதல் கட்டமாக 10 லட்சம் ரூபாய் பணத்தை தர கோரியுள்ளனர்.

கணேஷிடமிருந்து ஏப்.19-ம் தேதி 5 லட்சமும், 29-ம் தேதி 5 லட்சமும் பணத்தை சோமசுந்தரமும், கண்ணன் இருவரும் பெற்றுள்ளனர். இது குறித்து விசாரணையில் தெரியவர, லஞ்ச ஒழிப்பு துறை காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக தற்போது மயிலாடுதுறை சிறப்பு காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.