தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகங்களில் ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன் வரிசையில் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் தலைமையில் நடந்தது. இதில், அணைக்கட்டு அடுத்த நேமநந்தபுரம் கிராமத்தை சேர்ந்த அரசு என்பவர் அளித்த மனுவில், நான் விவசாய பயன்பாட்டிற்காக டிராக்டர் வாங்க, வேலூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கடந்த 2007-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி ரூ.5.15 லட்சம் கடன் வாங்கினேன். அப்போது முன்பணமாக ரூ.40 ஆயிரம் கட்டினேன்.
பின்னர் மாத தவணையாக ரூ.2.20 லட்சம் வரை கட்டினேன். அதற்கு பிறகு என்னால் தவணை பணம் கட்ட முடியவில்லை. இதனால் வங்கி மேலாளர் எனது வீட்டிற்கு வந்து, நான் இல்லாதபோது டிராக்டரை எடுத்து சென்றுவிட்டார். வங்கிக்கு நேரில் சென்று கேட்டபோது, டிராக்டரை விற்பனை செய்துவிட்டதாக தெரிவித்தனர்.
மேலும் நான் கட்டிய பணம், டிராக்டரை விற்பனை செய்த பணமும் வாங்கிய கடனுக்கு சரியாகிவிட்டதாக கூறி என்னை அனுப்பிவிட்டனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம், நான் கடன் வாங்கிய தேசிய மயமாக்கப்பட்ட வங்கியை இப்போது விலைக்கு வாங்கி விட்டதாகவும், டிராக்டர் கடனுக்கான அசல், வட்டி ஆகியவை ரூ.36 லட்சம் ஆகிவிட்டதாகவும், கடனை தங்களிடம் கட்டவேண்டும் என அடிக்கடி கைபேசியில் பேசி தொல்லை தருகின்றனர்.
அதோடு கடனை கட்டாவிட்டால் அடியாட்களை வைத்து என்னை தூக்கிக்கொண்டுபோய் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி என்னுடைய நிலத்தை விற்பனை செய்துவிடுவதாக மிரட்டுகின்றனர் என அந்த புகார் மனுவில் அரசு தெரிவித்துள்ளார்.