தேசிய அளவில் முதலிடம் பிடித்த ஐடிஐ மானவிக்கு வி.கே. சசிகலா வாழ்த்து..!

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே பெரியதத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், விவசாயியான இவரது மகள் நித்யா. ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மின்னணு இயந்திரவியல் பாடப்பிரிவை பயின்று தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார்.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு பாடப் பிரிவுகளில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தேசிய அளவிலான ஆன்லைன் தேர்வு நடத்தப்பட்டது.இந்த இத்தேர்வில் ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மின்னணு இயந்திரவியல் படித்த நித்யாவும் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்.

இத்தேர்விற்கான முடிவு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. அதில் தேசிய அளவில் நடைபெற்ற இத்தேர்வில் மின்னணு இயந்திரவியல் பாடப்பிரிவில் தேசிய அளவில் முதல் ரேங்க் பெற்று நித்யா சாதித்துள்ளார். ஆகையால், மாணவி நித்யாவை ஆண்டிமடம் அரசு தொழில் பயிற்சி நிலைய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்தினர். இதை அறிந்த மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தேசிய அளவில் முதலிடம் பெற்ற மாணவியை வரவழைத்து முதலிடம் பெற்றதற்கான சான்றிதழை வழங்கி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், அரியலூர் மாவட்டம் பெரிய தத்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி திரு.ராஜேந்திரனின் மகள் நித்யா ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மின்னணு இயந்திரவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்று, தற்போது தேசிய அளவிலான ஆன்லைன் தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், தற்போது தனியார் நிறுவனத்தில் பணிக்கான ஆணையை பெற்றுள்ள மாணவி நித்யா தனது தன்னம்பிக்கையாலும், விடாமுயற்சியாலும் தொடர்ந்து பல்வேறு திறமைகளை வளர்த்துக்கொண்டு வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்து சீரோடும்,சிறப்போடும் வாழ எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.