தொல். திருமாவளவன் விளக்கம்: பீகார் மக்களை ஏய்த்து வாக்குகளை வாங்குவதற்காகத்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு

பீகார் மாநிலத் தேர்தலில் மக்களை ஏய்த்து வாக்குகளை வாங்குவதற்காகத்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதாக ஒன்றிய பாஜக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தொல்.திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில், இந்தியாவில் அடுத்து மேற்கொள்ளப்பட இருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பாக நடத்தப்படும் என இந்திய ஒன்றிய அரசு அறிவித்திருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்! இது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட சமூகநீதிக் கட்சிகளுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

அடுத்து மேற்கொள்ளப்பட இருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு’ என்றுதான் கூறி இருக்கிறார்கள். ஆனால், எப்போது அந்தக் கணக்கெடுப்பு நடக்கும் என அறிவிக்கப்படவில்லை. அடுத்த சென்சஸ் கணக்கெடுப்பு என்றால் அது 2031 க்குப் பிறகுதான். அப்போது பாஜக ஆட்சியில் இருக்கப் போவதில்லை. எனவே, இந்த அறிவிப்பு அரசியல் ஆதாயத்துக்காக செய்யப்பட்டதாகவே நாம் கருத வேண்டியுள்ளது.

ஒன்றிய பாஜக அரசும் சங் பரிவார் அமைப்புகளும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படுவதை எதிர்த்து வந்தன. அதைத் தவிர்ப்பதற்காகவே 2011-ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை இதுவரை மேற்கொள்ளாமல் ஏமாற்றி வந்த பாஜக அரசு இப்போது திடீரென இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதற்குக் காரணம் என்ன ? என நாம் சிந்திக்க வேண்டும்.

இன்னும் சில மாதங்களில் பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்தத் தேர்தலின் மையப் பிரச்சனையாக சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மாறி இருக்கிறது. இராகுல் காந்தி சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பதைத்தான் தனது பரப்புரையில் முன்னிறுத்தி வருகிறார். அதை சமாளிப்பதற்காகவே ஒன்றிய பாஜக அரசு இந்த அறிவிப்பைச் செய்து இருக்கிறது.

சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு 2036 இல் நடைமுறைக்கு வரப்போகிற மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை எப்படி 2024 பொதுத் தேர்தலில் ஆதாயம் அடைவதற்காக 2023 இல் நிறைவேற்றியதோ, அதேபோலத்தான் 2031 க்குப் பிறகு நடக்கப்போகும் சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பே பாஜக அரசு அறிவிப்புச் செய்துள்ளது.

சமூக நீதியில் உண்மையிலேயே ஒன்றிய பாஜக அரசுக்கு அக்கறை இருந்தால் உடனடியாக மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியைத் துவக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே அதற்கான சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு எண்-246, மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்ளும் அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு வழங்கியுள்ளது. அது ஒன்றிய அதிகாரப் பட்டியலில் 69-ஆகப் பட்டியல் இடப்பட்டுள்ளது. இது தெரிந்திருந்தும் பாஜகவைக் காப்பாற்றுவதற்காகத் தமிழ்நாட்டில் சில கட்சிகள் திமுக அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பைச் செய்யவேண்டும் எனக் கூப்பாடு போட்டு வந்தன. அந்தக் கட்சிகள் இப்போதும் மாநில அரசுதான் இந்தக் கணக்கெடுப்பைச் செய்யவேண்டும் எனச் சொல்வார்களா? சென்சஸ் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்கச் சொல்லி ஒன்றிய அரசை வலியுறுத்துவார்களா?

பீகார் மாநிலத் தேர்தலில் மக்களை ஏய்த்து வாக்குகளை வாங்குவதற்காகத்தான் ஒன்றிய பாஜக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது என்றாலும் சாதிவாரிக் கணக்கெடுப்பும் அதனடிப்படையில் பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டை உயர்த்துவதும் சமூகநீதிக் கொள்கைக்கு வெற்றி! சனாதனவாதிகளின் திட்டத்துக்குப் பின்னடைவு! எனவே, இந்த அறிவிப்பை வரவேற்கிறோம். இதனை நடைமுறைப்படுத்திட சமூகநீதி கட்சிகள்-இயக்கங்கள் யாவும் ஒருங்கிணைந்து ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தம் தரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம் என தொல்.திருமாவளவன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.