கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் செவிலியர் ஒருவரை மதுபோதையில் இளைஞர் ஒருவர் தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டியிலுள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் நேற்று முன் தினம் இரவு லட்சுமி என்ற செவிலியர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது முதியோர் மருத்துவ வளாகத்தில் இளைஞர் ஒருவர் தூங்கிக்கொண்டு இருந்தார். அருகில் சென்று பார்த்த போது அந்த இளைஞர் மது போதையில் தூங்கிக் கொண்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து செவிலியர் லட்சுமி, அவரை எழுப்பி நீங்கள் யார், இங்கே படுக்க கூடாது. என்று கூறி இருக்கிறார். அதற்கு அந்த இளைஞர், என் பெயர் ஜான்சன் என்றும், முதியோர் மருத்துவமனை வளாக தற்காலிகமாக வார்டு பாயாக பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்து இருக்கிறார். அப்போது லட்சுமி, மது போதையில் மருத்துவமனைக்கு வருவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை என்றும், எனவே வெளியே செல்லுங்கள் என்றும் கூறி இருக்கிறார்.
ஆனால் அவர் வெளியேற மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் செவிலியர் லட்சுமி இது பற்றி அதிகாரியிடம் புகார் செய்ய உள்ளதாக கூறி இருக்கிறார். அப்போது இளைஞர் ஜான்சன் தான் வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்து காட்டி மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன லட்சுமி தனது செல்போனில் வீடியோ எடுக்க முற்பட்டு இருக்கிறார். இதனால் மேலும் கோபமடைந்த ஜான்சன் கத்தியை எடுத்து தாக்க முயற்சித்ததாகவும், ஆபாச வார்த்தையால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதில் லட்சுமி கத்தி கூச்சலிட்டார். இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் ஓடி வந்தனர். பின்னர் ஜான்சனை பிடித்து கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர் கிண்டி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். கிண்டி காவல்துறை மது போதையில் செவிலியரை கத்தியால் தாக்க முயன்ற ஜான்சன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவத்தால் கலைஞர் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.