கிருஷ்ணகிரி ஆட்சியர் தினேஷ் குமார் அறிவிப்பு: பட்டா, குடும்ப அட்டை… உடனடி தீர்வு..!

ஜமாபந்தி நிகழ்ச்சி வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதமும், மக்களிடம் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யும் விதமாக ஜமாபந்தி நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் வரும் 16-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் அரசின் சேவைகள் தொடர்பாக மனு அளிக்கலாம். குறிப்பாக பட்டா, பட்டா பெயர் மாற்றம், குடும்ப அட்டை, அரசின் உதவித்தொகை உள்ளிட்டவை தொடர்பாக மனு அளித்து, பயன்பெற முடியும்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் வெளியிட்ட அறிவிப்பில், “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, பர்கூர், போச்சம்பள்ளி, ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய 8 தாலுகாக்களில் வருகிற 16-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை அலுவலர்களிடம் வழங்கலாம். அதன்படி கிருஷ்ணகிரி தாலுகாவில் ஆட்சியர் தினேஷ்குமார் தலைமையில் வருகிற 16-ந் தேதி மற்றும் 20 முதல் 23-ந் தேதி வரையிலும், 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரையும் ஜமாபந்தி நிகழ்ச்சி நடக்கிறது.

இதேபோல சூளகிரி தாலுகாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள் தலைமையில் 16, 20, 21, 22, 23-ந் தேதிகளிலும், தேன்கனிக்கோட்டை தாலுகாவில் ஓசூர் உதவி ஆட்சியர் பிரியங்கா தலைமையில் 16, 20, 21, 22, 23, 27, 28-ந் தேதிகளில் நடக்கிறது. போச்சம்பள்ளி தாலுகாவில் கிருஷ்ணகிரி உதவி ஆட்சியர் ஷாஜகான் தலைமையில் 16, 20, 21, 22, 23, 27-ந் தேதிகளிலும் பர்கூர் தாலுகாவில் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் தனஞ்செயன் தலைமையில் 16, 20, 21, 22, 23-ந் தேதிகளிலும் ஓசூர் தாலுகாவில் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் தர்மராஜ் தலைமையில் 16, 20, 21, 22, 23-ந் தேதிகளிலும் நடக்கிறது. ஊத்தங்கரை தாலுகாவில் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரமேஷ்குமார் தலைமையில் 16, 20, 21, 22, 23-ந் தேதிகளிலும், அஞ்செட்டி தாலுகாவில் மாவட்ட வழங்கல் அலுவலர் கீதாராணி தலைமையில் 16, 20-ந் தேதிகளிலும் ஜமாபந்தி நிகழ்ச்சி நடக்கிறது” என மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.