கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளி முன் மாலை, இரவு நேரங்களில் நான்கு சக்கர வாகனத்தில் வைத்து சிலர் பாஸ்ட் புட் பிரியாணி கடை நடத்துகின்றனர். அந்த கடைக்கு 5-வது வார்டு அதிமுக கவுன்சிலர் ராஜேந்திரன் சென்று, ‘போக்குவரத்துக்கு இடையூறா இங்கே பிரியாணி கடை நடத்துறீங்க… எனக்கு தினமும் நூறு ரூபாய் தரணும்’ என்று கேட்கிறார். அதற்கு கடை நடத்துபவர், ‘அதான் அவ்வப்போது வந்து வாங்கிட்டு போறீங்களே போதாதா? தினமும் 100 ரூபால்லாம் தர முடியாது.
நாங்க கடைக்கே 2,500 ரூபா வாடகை கொடுக்க வேண்டியிருக்கு, உங்களுக்கு 3 ஆயிரம் கொடுக்கனும்னா எப்படி முடியும்?’ என்று பதில் அளிக்கிறார். இதற்கு, ‘எனக்கு பணம் தராட்டா இங்க கடை போட விடமாட்டேன்’ என மிரட்டுகிறார் கவுன்சிலர். அதற்கு கடை நடத்தும் இளைஞர், ‘நானும் இந்த ஊர்க்காரன்தான், வக்கீல்தான், நாங்க கடைபோடுவோம். அண்ணே உங்களுக்கு மரியாதை கொடுக்குறேன். நீங்க இப்படி பண்ணாதீங்க…’ என்கிறார். இப்படி கவுன்சிலருக்கும் கடைக்காரருக்கும் இடையில் வாக்குவாதம் தொடர்கிறது. கவுன்சிலரின் மாமூல் கலாட்டா வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.