மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின், வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சொந்தமான கருவூலத்தில் பொங்கல் பண்டிகையின்போது கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த, இலவச வேட்டி, சேலைகள் கடந்த 7-ம் தேதி திருடப்பட்டன. மொத்தம், ரூ.15 லட்சம் மதிப்பிலான, 12,500 வேட்டிகள் திருடப்பட்ட நிலையில், வடக்கு தாசில்தார் சிவக்குமார் அளித்த புகாரின்பேரில் தல்லாகுளம் காவல்துறை வழக்கு பதிந்து விசாரித்தனர். சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி காவல்துறை விசாரித்ததில், இரண்டு சரக்கு வாகனங்களில் வந்த 4 பேர் வேட்டி, சேலைகளை திருடிச் சென்றது தெரிந்தது.
தொடர் விசாரணையில், நெல்பேட்டையைச் சேர்ந்த இப்ராகிம்ஷா, சுல்தான் அலாவுதீன் செல்லூரைச் சேர்ந்த குமரன் மதிச்சியத்தைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் சாகுல் ஹமீது, நில அளவைத்துறை கள உதவியாளர் சரவணன் ஆகிய 6 பேர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இவர்களில் குமரன், அலாவுதீன், இப்ராகிம்ஷா மற்றும் மணிகண்டனை காவல்துறை கைது செய்து விசாரித்ததில், சரவணன் கடந்தாண்டு தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்ட வேட்டி சேலைகள் எனக்கூறி, ரூ.3.50 லட்சத்துக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, முக்கிய குற்றவாளியான சரவணனை காவல்துறை தேடி வந்த நிலையில், அவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அம்மனு கடந்த வாரம் உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் தஞ்சாவூரில் தலைமறைவாக இருந்த சரவணனை, தல்லாகுளம் காவல்துறை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர். சரவணனின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில், சரவணனை நிரந்தர பணிநீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.