ஒன்றரை வயதே பிஞ்சுக் குழந்தையின் கை அகற்றத்திற்கு யார் காரணம்..?

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர் – அஜிஸா தம்பதியரின் ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு கடந்த ஓராண்டாக தலையில் ரத்தக்கசிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்ற போதிலும் சரி ஆகாததால் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தங்கள் குழந்தையை அவர்கள் அனுமதித்துள்ளனர்.

இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு குழந்தைக்கு மருந்து ஏற்றுவதற்காக கையில் டிரிப்ஸ் போடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, குழந்தையின் வலது கை அழுகத் தொடங்கியது. தவறான டிரிப்ஸ் போட்டதே இதற்கு காரணம் என குழந்தையின் பெற்றோர்கள் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக குழந்தையின் பெற்றோர்கள் மருத்துவமனை வாசலில் போராட்டம் நடத்தினர். இதனால் இந்த விவகாரம் பூதாகரமாகியது.

இதையடுத்து, அந்தக் குழந்தை எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அந்தக் குழந்தையின் அழுகிய கையை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சுமார் 2 மணிநேர அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் கை அகற்றப்பட்டது. ஒன்றரை வயதே பிஞ்சுக் குழந்தையின் கை அகற்றப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற ரூ.15 ஆயிரம் லஞ்சம்

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை காத்பாடா பகுதியை சேர்ந்த லட்சுமி, இவரது கணவர் ஞானம். இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் லட்சுமியின் மாமனார் செல்வராஜ் காலமாகிவிட்ட நிலையில், கணவர் ஞானத்துக்கு சட்டபூர்வ வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக லட்சுமி தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் இ-சேவை மையத்தின் மூலம் விண்ணப்பித்துள்ளார்.

ஆனால் வெகு நாட்கள் ஆகியும் சான்றிதழ் கொடுக்காமல் வருவாய் அலுவலர்கள் இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது. இதனால் நேரடியாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று இது குறித்து முறையிட்டபோது, லட்சுமியிடம் பேசிய அலுவலக உதவியாளர் ஒருவர் சான்றிதழ் கிடைக்க வேண்டுமென்றால் தாசில்தாருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி தனக்கு தெரிந்த சமூக ஆர்வலரை அழைத்துக் கொண்டு வட்டாட்சியர் அலுவலகம் சென்ற நிலையில், நகையை அடகு வைத்து ரூ.15 ஆயிரம் பணத்தை அலுவலக உதவியாளர் தனசேகர் என்பவரிடம் கொடுத்துள்ளார். அதை பெற்றுக்கொண்ட அலுவலக உதவியாளர் தனசேகர் சான்றிதழ் கிடைத்து விடும் எனக்கூறியதை லட்சுமியுடன் சென்ற நபர் வீடியோ எடுத்து வெளியிட்டார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குழந்தையை கட்டிப்போட்ட.. பாஜக பெண் நிர்வாகி கைது…

குழந்தைகள் வண்ணங்கள் முதல் எழுத்துக்கள் வரை முதல்முதலாக மழலையர் பள்ளியில் தான் குழந்தைகள் தான் பார்க்கின்றன. அங்கு அவர்கள் பார்க்கும் உலகம் இனிமையானதாக இருக்க அவர்களின் கல்வி அடிப்படைக்கு அஸ்திவாரம் போடும் இடம் மழலையர் பள்ளி.

ஆனால், குழந்தைகள் எவ்வளவு குறும்பு செய்தாலும், எந்த காரணம் கொண்டும் அடிக்கவே கூடாது. குழந்தைகளை அடித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தையை தாக்கியவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் கடுமையாக இருக்கிறது. மேலும் மழலையர் பள்ளிகள் எளிதாக ஆரம்பிக்க முடியாது, கடுமையான விதிமுறைகள் உள்ளன.

இந்நிலையில் சென்னை வில்லிவாக்கத்தில் பாஜக மத்திய சென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளராக உள்ள மீனாட்சி என்பவர் சிட்கோ நகர்ப் பகுதியில் மை பாட்டி வீடு என்ற மழலையர் பள்ளியை நடத்தி வருகிறார். மீனாட்சி நடத்தி வரும் மழலையர் பள்ளியில், ராஜாஜி நகரை சேர்ந்த சரண்யா என்பவரின் 7 வயது மகன் ஆட்டிசம் குறைபாட்டால் சிறுவன் படித்து வருகிறான். சிறுவன் மழலையர் பள்ளியில் சேர்ந்ததில் இருந்தே தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதாக சக ஊழியர்கள் சிறுவனின் பெற்றோருக்கு கூறியுள்ளார்களாம்.

இதையடுத்து தனது குழந்தை துன்புறுத்தப்பட்டது குறித்து மழலையர் பள்ளி உரிமையாளர் மீனாட்சியிடம் பெற்றோர் கேட்டனராம். அதற்கு அவர் மிரட்டல் விடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதையடுத்து வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் சிறுவனின் தாய் சரண்யா புகார் அளித்தார்.

அதன் பேரில் பள்ளிக்கு சென்று காவல்துறை விசாரணை செய்ததில், பள்ளி நிர்வாகி மீனாட்சி சிறுவனை கொடுமைப்படுத்தியதற்கான ஆதாரம் உள்ளதாக கருதினர். இதையடுத்து, மழலையர் பள்ளியின் உரிமையாளரும் பாஜக மத்திய சென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான மீனாட்சி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைத்தனர்.

பள்ளிச் சீருடையில் தலைமை ஆசிரியுடன் விமானத்தில் பறந்த மாணவி

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை – வள்ளுவரின் கூற்றிற்கு இணங்க தேசிய திறனறிவு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியை தலைமை ஆசிரியை தனது சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் சென்று உற்சாகப்படுத்துயுள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாணவநல்லூர் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்குத் தேசிய திறனறிவு தேர்வு மத்திய அரசால் நடத்தப்படுகிறது.

இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில் வாணவநல்லூர் ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் தேசிய திறனறிவு தேர்வு நடைபெற்றது. இதில் 8 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.இந்த தேர்வு எழுதுவதற்கு முன்பு இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களை எனது சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் சென்று மாணவர்களை உற்சாகப்படுத்துவேன் என்று அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை அமுதா அறிவித்திருந்தார்.

இதையடுத்து தேர்வில் மிருணாளினி என்ற எட்டாம் வகுப்பு மாணவி திறனறிவு தேர்வில் தேர்ச்சி பெற்றார். இதைக் கண்டு தலைமை ஆசிரியை மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஆசிரியை தேர்வின் போது மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வு பெறுவார்கள் என்பதற்காக விமானத்தில் அழைத்துச் செல்வேன் என்று ஒப்புக்குக் கூறியதாக மாணவர்கள் எண்ணிக் கொண்டிருந்தனர்.

ஆனால் சொன்னதைச் செய்து காட்டுவேன் என்ற அந்த தலைமை ஆசிரியை அமுதா வெற்றி பெற்ற மாணவி மிருநாளினியை பள்ளிச் சீருடையுடன் வாணவ நல்லூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். பின்னர் அங்கிருந்து விமானத்தில் சென்னை செல்ல டிக்கெட் வாங்கி மாணவியுடன் திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பறந்து சென்று மாணவியை அளவில்லாத சந்தோஷத்தை அடையச் செய்தார்.