போலி ஆவணம் மூலம் ரூ.3 கோடி சொத்து அபகரித்த 2 பேர் கைது..!

சென்னை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் பி.எஸ்.கே.தெருவை சேர்ந்த லட்சுமி பாய் மற்றும் அவரது சகோதரி பத்மா பாய் ஆகியோர் புகார் ஒன்று அளித்தனர். அதில், எங்களுக்கு சென்னை சிந்தாதிரிப்பேட்டை காக்ஸ் தெருவில் தலா 1083 சதுரடி கொண்ட இரண்டு வீடுகள் உள்ளது. இந்த வீட்டை கலைச்செல்வி மற்றும் சுசீலா ஆகியோர் போலி ஆவணம் மூலம் அபகரித்து விட்டனர். எனவே அவர்களிடம் இருந்து எங்கள் வீட்டை மீட்டு தர வேண்டும் என்று புகார் அளித்தனர்.

அந்த புகாரின் படி மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் மகேஸ்வரி உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் முருகேஸ்வரி குழுவினர் விசாரணை நடத்தினர். அதில், கலைச்செல்வி, சுசீலா மற்றும் அன்பு ஆகியோர் தங்களது பெயரில் போலியாக ஆவணங்கள் உருவாக்கி மோசடி செய்து ரூ.3 கோடி மதிப்புள்ள வீடுகளை அபகரித்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து, இவர்கள் மீது மோசடி உள்ளிட்ட 9 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

எல்.ஐ.சி. வாடிக்கையாளரிடம் ரூ.2½ கோடி சுருட்டிய ஏஜெண்டு

சென்னையில் எல்.ஐ.சி. வாடிக்கையாளரிடம் ரூ.2½ கோடி சுருட்டிய ஏஜெண்டு கைது செய்யப்பட்டார். சென்னை தியாகராயநகர், சாம்பசிவம் தெருவைச் சேர்ந்த தொழில் அதிபர் மனோகரன். இவர், சென்னை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், நான் எல்.ஐ.சி. இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வாடிக்கையாளராக உள்ளேன்.

2013-ம் ஆண்டு முதல் எல்.ஐ.சி.யில் பாலிசிதாரராக சேர்ந்து பணம் கட்டி வருகிறேன். இடையில் கொரோனா தொற்று நோய் காலத்தில் எல்.ஐ.சி. ஏஜெண்டு ரவீந்திரன் மூலமாக பணம் கட்டினேன். ஆனால் அவர் நான் கட்டிய பணத்தை முறையாக எல்.ஐ.சி. நிறுவனத்தில் கட்டாமல் மோசடி செய்து விட்டார். எல்.ஐ.சி. நிறுவனத்தின் ரசீதை போல போலியான ரசீதையும் தயாரித்து கொடுத்து விட்டார். அவர் என்னிடம் ரூ.2½ கோடி அளவுக்கு பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு, காவல் கண்காணிப்பாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் மகேஸ்வரி, துணை கண்காணிப்பாளர் மீனா, உதவி கண்காணிப்பாளர் ஜான்விக்டர் ஆகியோர் மேற்பார்வையில், உதவி ஆய்வாளர் பாரதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். எல்.ஐ.சி. ஏஜெண்டு ரவீந்திரன் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து மோசடியில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.