இடம் கொடுக்காத கொள்கை உறுதியும், கொண்ட தலைமை மீது விசுவாசமும் உடையவர் அன்புச் சகோதரர் செங்கோட்டையன்” என ஜெயலலிதா பேசிய வீடியோவை செல்போனில் மைக் முன்பு போட்டு செங்கோட்டையன் காட்டினார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மேற்கு ஒன்றிய பகுதியில், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் 108-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்ட மேடையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் ஆகிய இருவரின் புகைப்படங்களும் பெரிதாக ஒரே அளவில் இடம் பெற்றிருந்தன. இந்த விழாவில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “தடுக்கி விழுந்தால் தமிழ்நாட்டில் யார் எந்த ஊரில் உள்ளார்கள் என எனக்கு தெரியும். எம்.ஜி.ஆருக்கு வந்த சோதனை யாருக்கும் வந்திருக்காது.
எதிர்கட்சித் தலைவரின் கட்டளையில் தான் இந்த கூட்டம் நடைபெறுகிறது. என்னை யாரும் சிக்க வைக்க முடியாது. நான் எத்தனை ஆண்டுகளில் அரசியல் உள்ளேன், எண்ணற்ற தலைவர்களை பார்த்துள்ளேன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் காட்டிய பாதையில் நான் சென்று கொண்டுள்ளேன். செய்தியாளர்கள் என்னிடம் எதவாது கிடைக்குமா என எதிர்பார்க்கின்றனர். காலையில் சொன்னதை இப்போதும் சொல்கிறேன், நீங்கள் எதிர்பார்க்கும் எதுவும் சொல்ல மாட்டேன்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படம் இல்லை. அவர்கள் புகைப்படம் இல்லாததால் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை, நான் புறக்கணிக்கவில்லை. அதைப்பற்றி தற்போது நிறைய பேர் பேசி வருகின்றனர். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. எத்தனையோ வாய்ப்புகள் வந்த போது கட்சிக்காக பாடுபட்டவன். என்னை சோதிக்காதீர்கள். இதுதான் எனது வேண்டுகோள். நான் தெளிவாக இருக்கிறேன்.
காவல்துறை பாதுகாப்பு அவர்கள் போட்டு இருக்கின்றனர். பாதுகாப்பு கண்காணிப்பு என்பது காவல் துறை போட்டது. நான் போட சொல்லவில்லை. கோட்டைக்கு வர வேண்டும் என்றால் செங்கோட்டையனை சுற்றி வருகின்றார்கள். 43 ஆண்டு ஆட்சியில் நான் யாரையும் தவறாக பேசியதில்லை. கோபப்பட்டது இல்லை. ஜெயலலிதாவின் பணிகளை கண்கூடாகப் பார்த்தவன் நான். ஜெயலலிதா விரலை நீட்டும் போதே, அவர் கை அசைக்கும்போதே அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டு செயல்பட்டவன் நான். ஏன் கழற்றி விட்டார் எனக் கேட்பார்கள். அதற்கெல்லாம் காரணம் இருக்கிறது, அதையெல்லாம் சொன்னால் தவறாகப் போய்விடும்.
ஏன் செங்கோட்டையனுக்கு கட்சியில் 2 பெரிய பொறுப்புகளை தந்தேன் என ஜெயலலிதா சொன்னது இன்னும் என் நெஞ்சில் இருக்கிறது. “எந்தப் பணியைக் கொடுத்தாலும் அதை வெற்றிகரமாக முடிக்கக்கூடியவர் செங்கோட்டையன்” என ஜெயலலிதா கூறினார். தொடர்ந்து, தன்னைப் பற்றி ஜெயலலிதா பேசும் ஆடியோ ஒன்றையும் மைக் முன்பு போட்டு செங்கோட்டையன் காட்டினார். “இடம் கொடுக்காத கொள்கை உறுதியும், கொண்ட தலைமை மீது விசுவாசமும் உடையவர் அன்புச் சகோதரர் செங்கோட்டையன்.” என ஜெயலலிதா பேசிய வீடியோவை செல்போனில் மைக் முன்பு போட்டுக் காட்டினார்.
தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், “தன்னலம் கருதாமல் செயல்படக்கூடியவன் நான், இயக்கம் ஒன்றே பெரிதென நினைப்பவன். நான் என்றைக்கும் என்னை தலைவன் என்று சொன்னதில்லை. என்றைக்கும் தொண்டன் என்றுதான் சொல்லி இருக்கிறேன். அதில் இருந்து நீங்கள் என்னை புரிந்துகொள்ளலாம். மீண்டும் தமிழகத்தில் தொண்டர்களோடு தொண்டராக இருந்து பணியாற்றுவேன்” என செங்கோட்டையன் பேசினார்.