பிரதமர் மோடியை நேரில் மணிப்பூர், நாகாலாந்து, மிசோரம் பற்றி எரியுதே போய் பாருங்க

மேற்கு வங்க சட்டசபையில் மணிப்பூர் நிலைமை தொடர்பாக மமதா பானர்ஜி பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடியை மணிப்பூருக்கு செல்லுங்கள் என பாஜக எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்த வேண்டும்.  மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மாநிலங்கள் எரிகின்றன. ஆனால் நீங்கள் அங்கும் இங்குமாக சென்று கொண்டிருக்கிறீர்கள். மிசோரம், மணிப்பூர், நாகாலாந்தில் யாருடைய அரசு இருக்கிறது? இந்த மாநிலங்களில் உங்கள் அரசுதான் ஆட்சியில் உள்ளது.

ஆகையால் நீங்கள் இந்த மாநிலங்களுக்கு செல்லத்தான் வேண்டும். ஜம்மு காஷ்மீர் ஏற்கனவே நிர்மூலமாக்கப்பட்டுவிட்டது. “இந்தியா” கூட்டணியின் குழு மணிப்பூர் செல்ல இருக்கிறது. 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக மேற்கு வங்கத்தை எதிர்கொள்வது பற்றி பாஜக தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி இருக்கின்றனர். அந்த கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. ஜாதி, மத அடிப்படையில் மேற்கு வங்கத்தை பிளவுபடுத்துவதற்கு பாஜக சதி செய்திருக்கிறது.

அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தலைவர்கள் இந்த சட்டசபையில் அமர்ந்துள்ளனர். இவ்வாறு மமதா பானர்ஜி கூறினார். மேலும் தாம் மணிப்பூர் மாநிலம் செல்வதற்கு அனுமதி கேட்டதாகவும் ஆனால் மணிப்பூர் மாநில நிலைமைகளை நேரில் ஆய்வு செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் மமதா பானர்ஜி குற்றம்சாட்டி இருக்கிறார். மணிப்பூருக்கு நாளை செல்லும் “இந்தியா” கூட்டணி எம்.பி.க்கள் குழுவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சுஷ்மிதா தேவ் உட்பட 2 பேர் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.