நாட்டின் தலைநகரம் டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரவிந்த் கேஜ்ரிவால் முதலமைச்சராக பதவி வகிக்கின்றார். கடந்த 2021 -ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 -ஆம் தேதி டெல்லி அரசால் கலால் கொள்கை அமல்படுத்தப்பட்டு புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. 2022 -ஆம் ஆண்டு ஜூலை 31 புகார் எழுந்ததையடுத்து கலால் கொள்கை டெல்லி அரசால் ரத்து செய்யப்பட்டது.
இந்த கலால் கொள்கைக்கு ஏராளமான முறைகேடுகள் என்று புகார்கள் எழுந்தன. அதாவது, மது விற்பனை செய்ய லைசன்ஸ் பெற்றவர்களுக்கு ரூ.144.36 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், விதிகள், செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு நிறுவனத்தின் ரூ.30 கோடி மதிப்பிலான டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்திருந்தார். இதனையடுத்து அமலாக்கத்துறையும், சிபிஐ-யும் வழக்கு விசாரணையை கையில் எடுத்தன.
இதன் விளைவாக செப்டம்பர் 22 -ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சியின் தகவல் தொடர்பு தலைவர் விஜய் நாயர் சி.பி.ஐ மூலம் கைது செய்யப்பட்டார், அவரை தொடர்ந்து அக்டோபர் 17 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவிடம் சி.பி.ஐ. 8 மணி நேரம் விசாரணை நடத்தி, நவம்பர் 25 -ஆம் தேதி 7 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. 2023 -ஆம் ஆண்டு பிப்ரவரி 18 -ஆம் தேதி மணீஷ் சிசோடியாவிக்கு சம்மன் அனுப்பி 26 -ஆம் தேதி கைது செய்தது. 28 -ஆம் தேதி துணை முதல்வர் பதவியை மணீஷ் சிசோடியா ராஜினாமா செய்தார்.
மேலும் அக்டோபர் 4ஆம் தேதி ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங்கின் வீடு மற்றும் அவருக்கு நெருங்கியவர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. தொடர்ந்து கடந்த 16 -ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள பாரத ராஷ்டிர சமிதி தலைவர் கவிதாவின் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அவரை கைது செய்தது. இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் மதுபான கொள்கையில் முறைகேடு விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை கடந்த நவம்பர் முதல் 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் 8 சம்மன்களையும் அரவிந்த் கேஜ்ரிவால் தொடர்ந்து நிராகரித்து வந்தார். இதனை தொடர்ந்து கேஜ்ரிவாலை கடந்த 21-ம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், அரவிந்த் கேஜ்ரிவாலை சுனிதா கேஜ்ரிவால் செவ்வாய்க்கிழமை மாலை அமலாக்கத் துறை அலுவலகத்தில் சந்தித்தார். இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் சுனிதா கேஜ்ரிவால் பேசுகையில், “இரண்டு நாட்களுக்கு முன்பு, அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லியின் தண்ணீர் மற்றும் கழிவுநீர் பிரச்சினை தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் அதிஷிக்கு கடிதம் அனுப்பி இருந்தார். மத்திய அரசு அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளது. அவர்கள் டெல்லியை அழிக்க நினைக்கிறார்களா? மக்கள் தொடர்ந்து துன்பத்தில் தவிக்க வேண்டும் என்று விரும்புகிறார்களா என்ன?. இந்த வழக்கால் அரிவிந்த் கேஜ்ரிவால் மிகவும் வேதனை அடைந்துள்ளார்.
மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத் துறை சுமார் 250-க்கும் அதிமான சோதனைகளை நடத்தியுள்ளது. ஊழல் எனச் சொல்லி அவர்கள் பணத்தைத் தேடி வருகின்றனர். ஆனால் இதுவரை எதையும் கண்டுபிடிக்கவில்லை. அரவிந்த் கேஜ்ரிவால் மார்ச் 28-ம் தேதி நீதிமன்றத்தில் அனைத்தையும் வெளிப்படுத்துவேன் என்று தெரிவித்தார். மதுபான ஊழல் வழக்கின் பணம் எங்கே சென்றது என்பதைத் தெரிவிப்பார். அனைத்து ஆதாரங்களையும் அளிப்பார்” இவ்வாறு சுனிதா கேஜ்ரிவால் என பேசினார்.