சவுரப் பரத்வாஜ்: “தற்போதைய சூழலில் ஆம் ஆத்மியை ஒருங்கிணைக்க சுனிதா கேஜ்ரிவாலே சிறந்தவர்”

நாட்டின் தலைநகரம் டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரவிந்த் கேஜ்ரிவால் முதலமைச்சராக பதவி வகிக்கின்றார். கடந்த 2021 -ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 -ஆம் தேதி டெல்லி அரசால் கலால் கொள்கை அமல்படுத்தப்பட்டு புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது.

அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. 2022 -ஆம் ஆண்டு ஜூலை 31 புகார் எழுந்ததையடுத்து கலால் கொள்கை டெல்லி அரசால் ரத்து செய்யப்பட்டது.

இந்த கலால் கொள்கைக்கு ஏராளமான முறைகேடுகள் என்று புகார்கள் எழுந்தன. அதாவது, மது விற்பனை செய்ய லைசன்ஸ் பெற்றவர்களுக்கு ரூ.144.36 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், விதிகள், செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு நிறுவனத்தின் ரூ.30 கோடி மதிப்பிலான டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது குறித்து சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்திருந்தார். இதனையடுத்து அமலாக்கத்துறையும், சிபிஐ-யும் வழக்கு விசாரணையை கையில் எடுத்தன. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் மதுபான கொள்கையில் முறைகேடு விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை கடந்த நவம்பர் முதல் 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் 8 சம்மன்களையும் அரவிந்த் கேஜ்ரிவால் தொடர்ந்து நிராகரித்து வந்தார். இதனை தொடர்ந்து கேஜ்ரிவாலை கடந்த 21-ம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது.

அமலாக்கத் துறையின் விசாரணையை அடுத்து அவரை வரும் 15-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அரவிந்த் கேஜ்ரிவால் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திஹார் சிறையில் இருந்தவாறு அரவிந்த் கேஜ்ரிவால் அளித்த செய்திகளை மூன்று முறை அவரது மனைவி சுனிதா கேஜ்ரிவால் சமூக ஊடகங்கள் மூலம் தெரிவித்திருக்கிறார். அதோடு, இண்டியா கூட்டணி சார்பாக டெல்லியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சுனிதா கேஜ்ரிவால், அங்கு அரவிந்த் கேஜ்ரிவாலின் உரையை வாசித்தார். மேலும், அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு சிங்கம் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

சுனிதா கேஜ்ரிவாலின் இத்தகைய நடவடிக்கைகளை விமர்சித்துள்ள பாஜக, டெல்லியில் ஒரு ராப்ரி தேவி உருவாகி வருவதாக கூறி வருகிறது. இந்நிலையில், சவுரப் பரத்வாஜின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது. டெல்லி அமைச்சருமான சவுரப் பரத்வாஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், “அரவிந்த் கேஜ்ரிவாலின் செய்தியை தற்போது சுனிதா கேஜ்ரிவால் வழங்கி வருகிறார். இது கட்சியினர் மத்தியிலும் ஆதரவாளர்கள் மத்தியிலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதை நாங்கள் முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம். தற்போதைய சூழலில் ஆம் ஆத்மி கட்சியை ஒருங்கிணைக்க சுனிதா கேஜ்ரிவால்தான் சிறந்த நபர்” என சவுரப் பரத்வாஜ் கருத்து தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்காக சுனிதா கேஜ்ரிவால் பிரச்சாரம் செய்வாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “அது நிகழ்ந்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம். ஆனால், பிரச்சாரத்தில் பங்கேற்பது என்பது அவரது தனிப்பட்ட முடிவு” என சவுரப் பரத்வாஜ் கூறினார்.

சுனிதா கேஜ்ரிவால்: மக்களவைத் தேர்தல் வரை கேஜ்ரிவாலை சிறையில் வைத்திருக்க வேண்டும் என்பதே பாஜகவின் திட்டம்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் மதுபான கொள்கையில் முறைகேடு விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை கடந்த நவம்பர் முதல் 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் 8 சம்மன்களையும் அரவிந்த் கேஜ்ரிவால் தொடர்ந்து நிராகரித்து வந்தார். இதனை தொடர்ந்து கேஜ்ரிவாலை கடந்த 21-ம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அமலாக்கத் துறை காவல் நிறைவடைந்ததை அடுத்து அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத் துறை காவல் நீட்டிப்பை கோரவில்லை. அதேநேரத்தில், “கேஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. வேண்டுமென்றே விசாரணையை திசை திருப்புகிறார். அவருடைய டிஜிட்டல் உபகரணங்களின் கடவுச் சொற்களைத் தர மறுக்கிறார்.

ஆகையால் அவரை நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டும்” என்று அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து கேஜ்ரிவாலை வருகிற ஏப்ரல் 15 -ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இன்றைய விசாரணையின்போது ஆம் ஆத்மி அமைச்சர்கள் அதிஷி, சவுரப் பரத்வாஜ், கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுனிதா கேஜ்ரிவால், “அமலாக்கத் துறையின் விசாரணை முடிவடைந்துவிட்டது. அவர் குற்றம் இழைத்தார் என நீதிமன்றம் கூறவில்லை. அப்படி இருக்கும்போது ஏன் அவரை சிறையில் அடைக்க வேண்டும்? மக்களவைத் தேர்தல் வரை கேஜ்ரிவாலை சிறையில் வைத்திருக்க வேண்டும் என்பதே அவர்கள் நோக்கம்” என சுனிதா கேஜ்ரிவால் தெரிவித்தார்.