சுங்கத்துறை அதிகாரி என மிரட்டி மருத்துவரிடம் ரூ.26 லட்சம் மோசடி..!

மகாராஷ்டிர மாநிலம், நவி மும்பை கன்சோலியில் வசிக்கும் மருத்துவர் ஒருவருக்கு கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி அழைப்பு ஒன்று வந்துள்ளது. மறுமுனையில் பேசிய நபர் தான் சுங்கத்துறை அதிகாரி என கூறி, நீங்கள் துபாய்க்கு அனுப்பிய பார்சலில் ஆட்சேபத்துக்குரிய போதைப் பொருட்கள் மற்றும் காவலர் சீருடைகள் இருப்பதாக மருத்துவரிடம் தெரிவித்துள்ளார்.

இதனால், அந்தேரி பகுதி காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்ய பரிந்துரை செய்ய இருப்பதாகவும், பணமோசடி மற்றும் தீவிரவாதிகளுடன் மருத்துவருக்கு தொடர்பு இருப்பதாக புகாரில் தெரிவிக்க உள்ளதாகவும் அந்த நபர் மிரட்டியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவரிடம் இந்தசிக்கல்களில் இருந்து வெளிவருவதற்கு ரூ.26.52 லட்சத்தை ஆன்லைனில் பல்வேறு வங்கி கணக்குகளில் செலுத்தும்படி அந்த நபர் மிரட்டியுள்ளார். பணம் செலுத்திய பிறகும்தொடர்ந்து பணம் கேட்டு அந்தநபர் நெருக்கடி அளி்த்துள்ளார். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மருத்துவர் அந்த சைபர் மோசடி கும்பல் மீது நவி மும்பை காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.