தவெக கொடி கட்டிய கார்.. எங்க கிட்டயே காசு கேக்குறியா..!?

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் நிலையில், தவெக கட்சி தொண்டர்கள், சுங்கச்சாவடியில் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் 27 -ஆம் தேதி மாலை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ளது.

‘வெற்றிக் கொள்கை திருவிழா’ என்கிற வாசகத்துடன் மாநாடு நுழைவாயிலில் கோட்டையின் மதில் சுவர் போல செட் அமைக்கப்பட்டு அதில் 2 யானைகள் முன்னங் கால்களை உயர்த்தி பிளிரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டு திடலில் காமராஜர், பெரியார், அம்பேத்கர் ஆகியோருக்கு நடுவே விஜய் கட்-அவுட் ஜொலித்து கொண்டுள்ளது. மாநாட்டுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் மாநாட்டு ஏற்பாடுகளை ஒப்பந்ததாரர்கள் இரவு பகலாக செய்து வருகின்றனர்.

தற்போது மாநாட்டுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்து விட்டதாகத் தெரிகிறது. மாநாட்டிற்கு வருபவர்கள் அனைவருக்கும் தேவையான கழிப்பிட வசதி, தேவையான அளவுக்கு குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தவெக மாநாட்டு பந்தல் பகுதியில் 700-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரியமங்கலம் சுங்கச்சாவடியில், தவெக கட்சிக் கொடி கட்டிய காரில் வந்த நிர்வாகிகள், சுங்கக் கட்டணம் செலுத்தாமல் ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

தவெக கொடி பொருத்தப்பட்ட காரில் ஃபாஸ்டேக் இல்லாத நிலையில், சுங்கக் கட்டணம் செலுத்தாமல் செல்ல முயன்றதாகவும், டோல்கேட் ஊழியர்கள் காரை மறித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. விக்கிரவாண்டி மாநாட்டு பணிகளை பார்வையிட்டுவிட்டு வரும் எங்களிடம் டோல்கேட் கட்டணம் கேட்கிறாயா என தவெக நிர்வாகி ஒருவர் ஊழியர்களிடம் ஆவேசமாக கேட்டதாகவும் கூறப்படுகிறது.

தவெக நிர்வாகிகளுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, அங்கு ஏராளமான தவெக தொண்டர்கள் திரண்டு, சுங்கச்சாவடி ஊழியர்களை மிரட்டியதாகவும், ரோடே சரியில்லை, எதற்கு சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

டிடிவி தினகரன்: தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்..!

நாடு முழுவதும் உள்ள 1000-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. அதேபோல, தமிழகத்தில் 64 இடங்களில் சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுங்க கட்டணத்தை ஒவ்வொரு ஆண்டும் உயர்த்திக்கொள்ள அனுமதியும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், லோக்சபா தேர்தல் வந்துவிட்டதால், கடந்த ஏப்ரல் மாதம் மாற்றி அமைக்கப்பட வேண்டிய சுங்கக்கட்டணம் நாடாளுமன்ற தேர்தலால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதற்கு பிறகு தேர்தல் முடிந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த ஜூன் மாதம் சுங்கக்கட்டணத்தை உயர்த்தியிருந்தது. அதன்படியே, தமிழ்நாட்டிலுள்ள 36 சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு 5% வரை கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. அந்தவகையில், தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், மதுரை எலியார்பத்தி, ஓமலூர் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. ஸ்ரீபெரும்புதூர், வாலாஜா உள்பட 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. சுங்கக்கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று நேற்றைய தினம் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், 17 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, சென்னசமுத்திரம், எலியார்பதி, கொடை ரோடு, கிருஷ்ணகிரி, மேட்டுப்பட்டி, மொரட்டாண்டி, நாதக்கரை, ஸ்ரீபெரும்புதுார், ஓமலுார், பாளையம், புதுார் பாண்டியபுரம், சமயபுரம், ஸ்ரீவைகுண்டம், வீரசோழபுரம், வேலன்செட்டியூர், விஜயமங்கலம், விக்கிரவாண்டி ஆகியவை கட்டணம் உயர்த்தப்பட உள்ள சுங்கச்சாவடிகள். இங்கு, 5 சதவீதம் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது. இதனால், வாகனங்களின் டயர்களுக்கு தகுந்தபடி, 5 முதல் 150 ரூபாய் வரை கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது. அதேபோல, 26 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருவதாக தகவல் பரவி வருகிறது.

முதலில் 25 சுங்கச்சாவடிகள், அடுத்து 17 சுங்கச்சாடிவகள், அடுத்து, 26 சுங்கச்சாவடிகள் என மாறி மாறி கட்டண உயர்வு வெளியாகி வருகின்றன. கட்டண உயர்வு குறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முறையான அறிவிப்பை வெளியிடாததே இந்த குழப்பத்திற்கு காரணம் என்கிறார்கள். சரக்கு வாகனங்கள்: ஏற்கனவே சரக்கு வாகனங்கள், ஆம்னி பஸ்களின் கட்டணம் மறைமுகமாக உயர்ந்து வரும்நிலையில், சுங்கக்கட்டணமும் உயர்வது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

எனவே, சாலை அமைப்பிற்கான கட்டணத்தை வசூல் செய்தபிறகு, சுங்க கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்க துவங்கியிருக்கிறது. அதேபோல, சுங்கச்சாவடி கட்டண உயர்வால் சரக்கு வாகனங்களின் வாடகை உயர்வதோடு, சாமானிய பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளில் தொடங்கி அனைத்து விதமான அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரக்கூடிய சூழலையும் உருவாக்கியுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அச்சம் தெரிவித்துள்ளார். எனவே, சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கான அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, தமிழகத்தில் காலாவதியான நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் சுங்கச்சாவடிகளை கண்டறிந்து அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.

அன்புமணி ராமதாஸ்: விதிப்படி 60 கி.மீக்கு ஒரு சுங்கச்சாவடி..! தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 20 சுங்கச்சாவடிகள்..! 67 சுங்கச்சாவடிகள் எப்படி..?

செப்டம்பர் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை சிறப்பாக பராமரிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள விக்கிரவாண்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 28 சுங்கச்சாவடிகளின் சுங்கக் கட்டணம் வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 7% வரை உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட சிக்கல்களால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்திலுள்ள பெரும்பாலான சுங்கச் சாவடிகளின் கட்டணத்தை உயர்த்துவது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளின் குறுக்கே 67 சுங்கச்சாவடிகளும், மாநில நெடுஞ்சாலைகளில் 7 சுங்கச்சாவடிகளும் உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் 62 சுங்கச்சாவடிகளில் 34 சுங்கச்சாவடிகளில், மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்த பிறகு கடந்த ஜூன் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்டது.

மீதமுள்ள விக்கிரவாண்டி, மொரட்டாண்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட 28 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.

ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் வாகனங்களைப் பொறுத்து 5% முதல் 7% வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப் படும்; ரூபாய் அடிப்படையில் பார்த்தால் குறைந்தது ரூ.5 முதல் அதிகபட்சமாக ரூ.150 வரை கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டுக்கான உயர்வு மிகவும் அதிகம் ஆகும். 2008 -ஆம் ஆண்டின் தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிகளின் அடிப்படையில் தான் ஒவ்வொரு ஆண்டும் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்பது அனைவரும் அறிந்தது தான்.

ஆனால், சுங்கக்கட்டண வசூல், கட்டண உயர்வு ஆகியவற்றில் எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை. சாலை அமைப்பதற்காக செய்யப்பட்ட செலவு எவ்வளவு? அதில் எடுக்கப்பட்ட முதலீடு எவ்வளவு? என்பது குறித்த எந்த விவரமும் வெளியிடப்படாமல் காலவரையின்றி சுங்கக்கட்டணம் செலுத்த மக்களை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கட்டாயப்படுத்துவது நியாயமல்ல.

தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கக்கட்டணத்தில் 60% மட்டும் தான் அதற்காக செய்யப்பட்ட முதலீட்டை ஈடு செய்வதற்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. மீதமுள்ள 40% தொகை பராமரிப்புக்காக செலவிடப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான சாலைகள் பராமரிக்கப்படுவதே இல்லை. சென்னை & திருச்சி நெடுஞ்சாலையில் பயணிப்பவர்களுக்கு முதுகுவலி ஏற்படுவது உறுதி. சென்னை & பெங்களூர் சாலையில் சென்னை முதல் வாலாஜா வரை பயணிப்பதற்குள் வாழ்நாள் துன்பங்கள் அனைத்தையும் அனுபவிக்க வேண்டியிருக்கும். நெடுஞ்சாலைகளை முறையாக பராமரிக்கத் தவறும் நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு சுங்கக்கட்டணத்தை உயர்த்துவதற்கு தார்மீக ரீதியில் எந்த உரிமையும் கிடையாது.

தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கி.மீக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டும் தான் இருக்க வேண்டும் என்பது விதியாகும். அதன்படி பார்த்தால் தமிழகத்தில் அதிகபட்சமாக 20 சுங்கச்சாவடிகள் மட்டும் தான் இருக்க வேண்டும். ஆனால், இப்போது 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. 2021- ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த போது மத்திய அரசுடன் பேச்சு நடத்தி தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 32 சாவடிகள் மூடப்படும்; 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே செயல்படும் என்று தமிழக நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அதன்பிறகு 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், புதிதாக 19 சுங்கச்சாவடிகள் தொடங்கப்பட்டிருக்கின்றனவே தவிர ஒரு சுங்கச்சாவடி கூட மூடப்படவில்லை. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் கூட்டணி அமைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றுகின்றன.

சுங்கக் கட்டண உயர்வு வாகனம் வைத்திருப்பவர்களை மட்டும் தான் பாதிக்கிறது என்பது தவறான வாதம் ஆகும். சுங்கக்கட்டண உயர்வைத் தொடர்ந்து தனியார் பேருந்துகளின் கட்டணங்கள் உயர்த்தப் படும். சரக்குந்துகளின் வாடகை உயர்த்தப்படும் என்பதால் அதற்கு இணையாக அனைத்து வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயரக் கூடும். உணவு தானியங்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் ஏற்கனவே கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில், சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவது அவர்களின் துயரத்தை மேலும் அதிகரிக்கும்.

சுங்கக்கட்டணங்களை உயர்த்துவதற்கு ஒரே ஒரு நியாயமான காரணம் கூட இல்லை. எனவே, செப்டம்பர் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை சிறப்பாக பராமரிக்க வேண்டும்.” என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை: தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும்..!

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் தலைவர் ஆர்.முனிரத்தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில், தமிழகத்தில் 56 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் 26 சுங்கச்சாவடிகள் காலாவதியான சுங்கச்சாவடிகள். இந்த சுங்கச் சாவடிகளை அகற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 7 லட்சம் லாரி உரிமையாளர்களை காப்பாற்ற வேண்டும். சுங்கசாவடியில் சுங்க கட்டணம் தொடர்ந்து உயர்த்தபடுவது துரதிஷ்டவசமானது. இது உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும்.

பெட்ரோல், டீசலுக்கு எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் விலையை தவிர, உள்கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணமாக பெட்ரோல், டீசலுக்கு முறையே லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.2 வரை மத்திய அரசு வசூலிக்கிறது. 2021-2022-ம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 3,08,49,000 மெட்ரிக் டன் பெட்ரோல் மற்றும் 7,66,59,000 மெட்ரிக் டன் டீசல் விற்பனை செய்யப்பட்டு உள்கட்டமைப்பு, மேம்பாட்டு நிதியாக ரூ. 2,70,000 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ரூ.20 லட்சம் கோடி சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக வசூலிக்கப்பட்ட பிறகு சுங்கசாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பது நியாயமற்றது.

ஆகவே நாடு முழுவதும் அனைத்து சுங்கசாவடிகளிலும் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சுங்க கட்டணம் வசூலிக்கும் 26 சுங்க சாவடிகளையும் மூட வேண்டும். மராட்டிய மாநிலம் புனேவில் இருந்து மும்பைக்கு 150 கி.மீ இந்த சாலையில் ஒரு சுங்கச் சாவடி மட்டுமே உள்ளது. டெல்லியிலிருந்து ஆக்ராவிற்கு 260 கி.மீ-க்கு 3 சுங்கச் சாவடிகள் மட்டுமே உள்ளன. ஆனால் தமிழகத்தில் செங்கல்பட்டிலிருந்து மீஞ்சூர் 60 கி.மீ-ல் 6 சுங்கச்சாவடிகள் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ளன. செங்கல்பட்டிலிருந்து மாதவரத்திற்கு 5 சுங்கச்சாவடிகள் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ளன. தமிழகத்தின் உள்ள லாரி உரிமையாளர்கள் தொழில் செய்வது கடினமாக உள்ளது.

மேலும் சென்னைக்கு அருகே உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் நீக்க வேண்டும். வண்டலூர் டூ மீஞ்சூர் உட்பட மாநில நெடுஞ்சாலையிலுள்ள கோலப்பஞ்சேரி, வரதராஜபுரம், பாலவேடு, மிஞ்சூர் சுங்கச் சாவடிகளில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு. திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து உள்ளூர் வாகனங்களுக்கு 50% சதவீதம் சுங்க வரியை குறைத்து தர வேண்டும். ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சுங்கச்சாவடிகள் உள்ளூர் வாகனங்களுக்கு 50% சதவீதம் சுங்க வரியை குறைக்க வேண்டும். லாரி தொழிலை பாதுகாக்க விரைவில் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதே கோரிக்கை மனுவை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலுவுக்கும் அனுப்பப்பட்டுள்ளன என தெரியவருகின்றது.