பாண்டிச்சேரி அ.தி.மு.க. மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் சி.பி.ஐ. இயக்குனருக்கு அனுப்பியுள்ள மனுவில், பாண்டிச்சேரியில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான நில அபகரிப்பு பின்னணியில் ஆளும் கூட்டணியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவருக்கு தொடர்பு உண்டு. அவர் சட்டசபையில் தன்மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ரூ.1 கோடி நஷ்டஈடு தருவதாக வாக்குமூலம் அளித்தார். தற்போது அவரின் குற்றம் நிரூபணமாகியுள்ளது.
வில்லியனூரில் மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை பொதுப் பதையாக காட்டி சுமார் 500-க்கும் மேற்பட்ட மனைகளை சிலர் ரூ.100 கோடிக்கு மேல் விற்றுள்ளனர். இதிலும் ஆளும் கட்சியில் முக்கிய பதவியில் உள்ளவர்களுக்கு தொடர்பு உள்ளது. தற்போது மணக்குள விநாயகர் கோவில் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுத்தாலும், கோவில் நிலத்தை பொதுப் பாதையாக ஏமாற்றி விற்றுள்ளனர். மனைகளை வாங்கிய 500-க்கும் மேற்பட்டோர் பாதையின்றி கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே கோவில் நிலத்தை பொது பாதையாக காண்பித்து மக்களை ஏமாற்றி மோசடி செய்த ஆளும்கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாண்டிச்சேரி அரசியல்வாதிகளின் அழுத்தத்திற்கு அடிபணியாமல், ஆட்சியாளர்களின் மோசடிகளுக்கு துணை செல்லாமல் வழக்கு விசாரணை நடைபெற சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் தான் உண்மையான தகவல்கள் முழுமையாக வெளிவரும் என மனுவில் தெரிவித்துள்ளார்.