2024 நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் பாக்கியராஜ் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாக்கிராஜ் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய சி.வி. சண்முகம், “பாஜக அரசு மக்களைப் பற்றிக் கவலைப்படாத அரசாக இருக்கிறது. மதத்தின் பெயரால் நாட்டில் பிரிவினைவாதத்தை பாஜக உருவாக்கி வருகிறது. நாடு இன்று ஒரு அபாயகரமான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது. அண்ணாமலை இங்கே மீண்டும் மோடி மீண்டும் மோடி என்கிறார். ஆனால், மக்கள் வேண்டாம் மோடி வேண்டாம் மோடி வேண்டாம் மோடி என்கிறோம்.
போதும்டா சாமி.. நீ ஆண்ட 10 ஆண்டுகளே போதும்டா சாமி என்கிறோம். நீங்கள் ஆண்டதும் போதும்.. மக்கள் கஷ்டப்பட்டதும் போதும். இன்னொரு முறை மோடியும் பாஜகவும் வந்தால் அது இந்திய ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய ஆபத்தாக அமையும். நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய ஆபத்து ஏற்படும் என்பதை நாம் உணர வேண்டும். இப்போதே யாராலும் எந்தத் தொழிலும் செய்ய முடிவதில்லை.
யாராவது பாஜகவை எதிர்த்தால் அவர்கள் மீது அமலாக்கத் துறை, சிபிஐ, ஐடி நடவடிக்கைகள் பாய்கிறது. பாஜகவின் கூட்டணிக் கட்சிகளைப் போல அமலாக்கத் துறை, சிபிஐ, ஐடி அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள். எதிர்த்துச் செயல்பட்டாலே நடவடிக்கை என்கிறார்கள். பாஜகவில் இருப்பவர்கள் எல்லாம் என்ன உத்தம காந்திகளா..? இன்று பாஜக தமிழ்நாட்டில் ஆட்சிக்குக் கூட வரவில்லை. நமது தயவால் நான் எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 4 பாஜக எம்எல்ஏக்கள் இருப்பது அதிமுக போட்ட பிச்சை என முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் தெரிவித்தார்.