சீமான்: அடுத்தவர் கால்களை நம்பி ..! என் பயணம் என் கால்களை நம்பிதான்..!

என் பயணம் என் கால்களை நம்பிதான் உள்ளது. அடுத்தவர் கால்களை நம்பி பயணத்தை தொடங்காதீர்கள் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். “இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும்” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மதியம் தூத்துக்குடிக்கு சென்றார். தூத்துக்குடி விமான நிலையத்தில் சீமான் செய்தியாளர்களுக்கு பதிலளித்தார்.

அப்போது, “இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன் பிடிக்கின்றனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்க கூறியுள்ளார். இலங்கையில் தமிழர்களை சுட்டு கொன்றார்கள், வலைகளை கிழித்து எறிந்தார்கள், இதற்கு மேல் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள். இதற்கு மேல் என்ன நடவடிக்கை உள்ளது.

இந்திய பெருங்கடல் என்றால் போதுமா? மீன் பிடிப்பதற்கு உரிமை இல்லையா?. இலங்கையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும். கட்சத்தீவை மீட்க வேண்டும். அதிமுக ஆட்சியில், அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள் திமுக ஆட்சியில் முடிக்கப்பட்டுள்ளன. பேருந்து நிலையத்தில் உதயசூரியன் சின்னம் தான் உள்ளது. அதிகாரம் நிலையானது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரம் தமிழன் கைக்கு வரும் போது அனைத்தும் மாறும். வசதியாக பதுங்க பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டது தான் திராவிடம்.

தமிழ் தேசியமும், திராவிடமும் ஒன்றல்ல. வேளாண் கல்லூரி மாணவர்களை நில அளவைக்கு பயன்படுத்துவது தவறு. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான கட்டமைப்பு நடைபெறுகிறது. அனைத்து கட்சியும் என் பின்னால் தான் ஓடி வருகிறார்கள். நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். என் பயணம் என் கால்களை நம்பிதான் உள்ளது. அடுத்தவர் கால்களை நம்பி பயணத்தை தொடங்காதீர்கள். என் கொள்கை யாரோடும் ஒத்து போகவில்லை. வியாபாரத்துக்காக கல்வி, மருத்துவத்தை தரம் குறைக்கிறார்கள். அவர்களுடன் எப்படி நாங்கள் சேர முடியும்.

அரசியல் அதிகாரம் இல்லாத, எளிய மக்கள் உள்ள இடங்களில் தான் நச்சு ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஊழல் செய்யும் அமைச்சர்கள் பட்டியலை வெளியிடுவோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் கூறியுள்ளார். திமுகவும் இதையே கூறியது. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுக்கும் இடையே தெருச்சண்டை தான் நடக்கிறது. இதை ஒழிக்க வேண்டும்” என சீமான் தெரிவித்தார்.

சீமான் ஆவேசம்: “ கேட்ட சின்னம் கிடைத்திருக்கும் நான் கூட்டணி வைத்திருந்தால் ”

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் முந்தய தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகள், இடங்களைப் பெற்றால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக, சின்னங்களை இழக்காத கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும். கடந்த ஆண்டு இந்திய தேர்தல் ஆணையம் மாநில அந்தஸ்து, தேசிய அந்தஸ்துகளை இழக்கும் கட்சிகள் பட்டியலை வெளியிட்டது.

இதில் புதுச்சேரியில் பாமக மாநில கட்சி அந்தஸ்தை பறிகொடுத்தது. இதனால் பாமக தமது மாம்பழ சின்னத்தையும் இழந்து இனி தேர்தல்களில் மாம்பழம் என்ற பொதுச் சின்னத்தில் போட்டியிடாத சூழ்நிலை உருவானது. அதேபோல டிடிவி தினகரனின் அமமுக, ஜிகே வாசனின் தமாகா மிக மிக சொற்பமான வாக்குகளைப் பெற்று டெபாசிட்டை இழந்தன. இதனால் இந்த கட்சிகளுக்கும் குக்கர் மற்றும் சைக்கிள் சின்னங்கள் கிடைக்காத நிலை ஏற்படாது. அதுபோல நாம் தமிழர் கட்சி, விசிக மற்றும் மதிமுகவிற்கும் சின்னங்கள் கிடைக்காத நிலை ஏற்படாது.

இந்நிலையில் லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் உரிய காலத்தில் விண்ணப்பித்து தங்களுக்கான சின்னங்களைப் பெறுவதில் முனைப்பு காட்டி வந்தன. பாமகவும் மாம்பழம் சின்னத்துக்கு விண்ணப்பித்திருந்தது. அமமுக குக்கர் சின்னத்துக்கும் ஜிகே வாசன் கட்சி சைக்கிள் சின்னத்துக்கும் மதிமுக பம்பரம் சின்னத்துக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்துக்கும் நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்துக்கும் விண்ணப்பித்தன. ஆனால் பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக சேர்ந்த உடனேயே அக்கட்சிக்கு மாம்பழ சின்னம் உறுதி செய்யப்பட்டது.

அதேபோல தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னமும் ஜிகே வாசனின் தமாகாவுக்கு சைக்கிள் சின்னமும் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டது. பாஜக கூட்டணியில் இடம் பெறாத மதிமுக, விசிக, நாம் தமிழர் கட்சிகளுக்கு கேட்ட சின்னத்தைத் தர முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதனால் இந்த அரசியல் கட்சிகள் அனைத்தும் நீதிமன்றங்களை நாடி தீர்ப்புக்கு காத்திருக்கிறது.

மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் வேறு மாநில கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டது. தொடர்ந்து தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருப்பதை கருத்தில் கொண்டு புதிய சின்னத்தை தேர்வு செய்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பும் பணியை நாம் தமிழர் கட்சி மேற்கொண்டது.

அதன்படி, அனுப்பிய சின்னங்களில் நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, இன்று சின்னத்தை அறிமுகப்படுத்தி செய்தியாளர்களைச் சந்தித்தார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

பின்னர் பேசிய அவர், “கடைசி நொடி வரை போராடி பார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை. அதனால் தான் மைக் சின்னத்தில் போட்டியிடுவது என்று முடிவெடுத்தோம். இவ்வளவு இடையூறுகளையும் தாங்கிக்கொண்டு நாங்கள் களத்தில் நிற்பது மக்களுக்காகதான். மக்கள் எங்களை கைவிட்டுவிட மாட்டார்கள் என்று நம்புகிறோம்.

கூட்டணி வைத்திருந்தால் நான் கேட்ட சின்னம் வந்திருக்கும். அப்படி கூட்டணி வைத்தவர்களுக்கு சின்னங்கள் வந்துள்ளது. நான் கூட்டணி வைக்க மறுத்துவிட்டேன். எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன். இந்த நாட்டில் நல்ல அரசியலை உருவாக்க நினைக்கிறேன். அதில் எந்தச் சூழலிலும் என் வாழ்நாளில் எந்த சமரசமும் செய்ய மாட்டேன்.

சின்னத்தில் மட்டும் விவசாயி அல்ல நான். உண்மையிலேயே விவசாயிதான். எனவே, நாங்கள் நம்பிக்கையோடு பயணிக்கிறோம். கொஞ்சம் தாமதம் தான். சின்னம் முதலிலேயே இருந்திருந்தால் பாதி தொகுதிக்கு சென்றிருப்பேன். இப்போது முதலில் இருந்து தொடங்க வேண்டும். நாளையில் இருந்து பிரச்சாரம் செல்கிறேன்.

எங்களை சுயேச்சையாக நிறுத்தி, 40 தொகுதிகளுக்கும் 40 சின்னங்கள் கொடுக்க வேண்டும் என்பது தான் அவர்களின் எண்ணம். ஏழு சதவிகித வாக்குக்கே பயம் என்றால், இந்தத் தேர்தலில் நான் என்ன செய்வேன் என்று யாருக்கு தெரியும்.” என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.