வடிவேலு வழக்கில் சிங்கமுத்து 2 வாரம் கால அவகாசம் நீதிமன்றம் உத்தரவு..!

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு தாக்கல் செய்த மனுவில், 300 படங்களில் நடித்துள்ளேன். எனது நகைச்சுவை காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. சமூக வலைத்தளங்களில் எனது நகைச்சுவை காட்சிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நடிகர் சிங்கமுத்துவும் நானும் கடந்த 2000 முதல் இணைந்து நடித்து வருகிறோம். நாங்கள் சேர்ந்து நடித்த படங்கள் பெரும் வெற்றி படங்களாகும்.

இந்நிலையில் எனது வளர்ச்சியை பார்த்து பொறாமை அடைந்த சிங்கமுத்து எனக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தார். இருவருக்கும் இடையே நிலம் தொடர்பான பிரச்னை ஏற்பட்டு அது தொடர்பான வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை யூடியூப் சேனல்களில் என்னை மிகவும் தரக்குறைவாக சிங்கமுத்து பேசியுள்ளார். இதனால், எனக்கு ரசிகர்கள் மத்தியில் உள்ள நல்ல பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனக்கு மிகவும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

எனவே, எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்த சிங்கமுத்து எனக்கு நஷ்டஈடாக ரூ.5 கோடி தருமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது 2 வாரங்களுக்குள் பதில் தருமாறு சிங்கமுத்துவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது; பதில்மனு தாக்கல் செய்ய நடிகர் சிங்கமுத்து அவகாசம் கோரினார். நடிகர் சிங்கமுத்து தரப்பு கோரிக்கையை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு இட்டார்.

சிங்கமுத்து: ஜனவரி, பிப்ரவரியை தவிர அனைத்து வரிகளையும் உயர்த்திவிட்டனர்…!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மீண்டும் கார்த்தி சிதம்பரம், அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ், பா.ஜ.க வேட்பாளர் தேவநாதன் யாதவ் களமிறங்கியிருக்கிறார்கள். சிவகங்கை அருகே மதகுபட்டியில் அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸை ஆதரித்து சிங்கமுத்து பேசுகையில், திமுக ஆட்சியில்தான் கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்கள் தமிழகத்துக்கு வந்தன. தமிழக மக்களை போதைக்கு அடிமையாக்கிவிட்டனர். பள்ளி மாணவர்கள் கையில் கஞ்சா உள்ளது.

திமுக ஆட்சியில் பலரும் வறுமைக் கோட்டுக்கு கீழ் சென்றுவிட்டனர். இதனால், அதிமுக எப்போது ஆட்சிக்கு வரும் என்று மக்கள் காத்திருக்கின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எப்போதும் பெண்களைச் சார்ந்தே திட்டங்களை நிறைவேற்றினார். ஆனால், திமுக பொதுமக்களிடம் வசூலிக்கும் வரிப் பணத்தில், மக்களுக்கு நன்மை எதுவும் செய்வதில்லை. நாம் பேருந்தில்கூட செல்ல முடியவில்லை. ஆனால், திமுககாரர்கள் ஒவ்வொருவரும் 10 கார்கள் வைத்துள்ளனர்.

பொய்யான வாக்குறுதியை நம்பி திமுகவுக்கு வாக்களித்து, ஏமாந்துவிட்டீர்கள். கடனைத் தள்ளுபடி செய்வார்கள் என்று கருதி, நகைகளை அடகு வைத்தனர். திமுகவைச் சேர்ந்த சிலருக்கு மட்டும் தள்ளுபடி செய்ததால், அடகு வைத்த நகைகளைத் திருப்ப முடியவில்லை. மேலும் பேசிய சிங்கமுத்து ஜனவரி, பிப்ரவரியை தவிர, தமிழகத்தில் அனைத்து வரிகளையும் ஏற்றிவிட்டனர். இந்தியா மற்றும் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல, அதிமுகவை ஆதரிக்க வேண்டும். அதிமுக கூட்டணியை 40 தொகுதிகளிலும் வெற்றிபெறச் செய்ய வேண்டும். இவ்வாறு சிங்கமுத்து பேசினார்.