திண்டுக்கல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார். அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மயில் ரவுண்டானா பகுதியில் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மறியலுக்கு முயன்றதால் காவல்துறையினருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து அவர்களை காவல்துறை கைது செய்து பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகி ராஜமாணிக்கம், காங்கிரஸ் நிர்வாகி நேரு, விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் மாயவன் உள்பட 96 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் ஆளுநரை வரவேற்பதற்காக உரிய அனுமதி இல்லாமல் பா.ஜ.க. மாவட்ட தலைவர் கனகராஜ் உள்ளிட்ட பா.ஜ.க.வினரும் பேருந்து நிலைய பகுதியில் திரண்டனர்.
அப்போது அவர்களை காவல்துறை பா.ஜ.க.வினரை அங்கிருந்து அப்புறப்படுத்தியபோது, அவர்கள் காவல் துறையினரை தள்ளிவிட்டு சாலை மறியலுக்கு முயன்றனர். இதனால் பா.ஜ.க.வினர், காவல் துறையினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையே பா.ஜ.க. மாவட்ட தலைவர் கனகராஜ் உள்பட 124 பேர் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.