நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று முன் தினம் பெங்களூரு தெற்கு தொகுதியில் திறந்த வாகனத்தில் நின்றவாறு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவருடன் காங்கிரஸ் வேட்பாளர் சவும்யா ரெட்டி, அவரது தந்தையும் அமைச்சருமான ராமலிங்க ரெட்டி உடன் இருந்தனர்.
இந்நிலையில் 40 வயது மதிக்கத்தக்க நபர் முதல்வர் சித்தராமையா பயணித்த வாகனத்தின் மீது, பாதுகாவலர்கள் கட்டுப்பாட்டை மீறி திடீரென ஏறினார். சித்தாரமையாவை வாழ்த்தி கோஷமிட்டவாறு அவருக்கு மாலை அணிவித்தார். அதேபோல சவும்யா ரெட்டி, ராமலிங்க ரெட்டி ஆகியோருக்கும் மாலை அணிவித்தார். அப்போது அவர் இடுப்பில் இருந்த துப்பாக்கியை கவனித்த சித்தராமையா, ராமலிங்க ரெட்டி ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை கீழே இறங்குமாறு சத்தம் போட்டனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விசாரணையில் துப்பாக்கியுடன் முதல்வர் சித்தராமையாவுக்கு மாலையிட்ட நபரின் பெயர் ரியாஸ் என தெரியவந்துள்ளது. காங்கிரசின் ஆதரவாளரான இவர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை முயற்சி தாக்குதல் நடந்துள்ளது. அதில் தப்பிய ரியாஸ் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி பெற்றுள்ளார் என தெரியவந்துள்ளது.