பாஜக எம்எல்ஏ மீது அவதூறு வழக்கு தொடர அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்

பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதி குறித்து பாஜக எம்எல்ஏ ராஜேஷ் சவுத்ரி தெரிவித்த கண்ணியமற்ற கருத்துக்காக அவர் மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெள்ளிக்கிழமை ஒரு செய்தி தொலைக்காட்சியின் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், உத்தரப் பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தின் மன்ட் தொகுதியின் பாஜக எம்எல்ஏ ராஜேஷ் சவுத்ரி, “மாயாவதி உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக நான்கு முறை இருந்துள்ளார் என்பதில் சந்தேகமே இல்லை. நாங்கள் தான் அவரை முதல் முறையாக முதல்வராக்கிய தவறைச் செய்தோம். உத்தரப் பிரதேசத்தின் மிகவும் ஊழல் நிறைந்த முதல்வர் மாயாவதியே” என்று தெரிவித்துள்ளார்.

பாஜக எம்எல்ஏவின் இந்தக் கருத்தை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டித்துள்ளார். இதுகுறித்து இந்தியில் வெளியிட்டுள்ள பதிவில், “உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் பெண் முதல்வருக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ பயன்படுத்தி இருக்கும் தவறான சொற்கள் பாஜக தலைவர்கள் பெண்களுக்கு, குறிப்பாக ஒடுக்கப்பட்ட மற்றும் சுரண்டப்பட்ட பிரிவுகளில் இருந்து வருபவர்களுக்கு எதிராக எவ்வாளவு கசப்பைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.

அரசியலில் வேறுபாடுகளுக்கு இடம் உண்டு, ஆனால் ஒரு பெண்ணாக அவரது கண்ணியத்தைக் கெடுப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. அவரை முதல்வராக உருவாக்கி தவறு செய்துவிட்டதாக பாஜக தெரிவித்திருக்கிறது. இது ஜனநாயக நாட்டில் மக்களின் கருத்துக்களை அவமதிக்கும் செயலாகும். மேலும் அவர் ஊழல் நிறைந்த முதல்வர் என்று ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது. பொதுவெளியில் இப்படி ஒரு கருத்தினை தெரிவித்ததற்காக பாஜக எம்எல்ஏ மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும்.

இப்படியான எம்எல்ஏக்களுக்கு ஆதரவு அளிப்பதன் மூலம், பாஜக பெண்களின் கண்ணியத்தினை புண்படுத்துகிறது. இதுபோன்றவர்கள் மீது பாஜக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இது ஒரு தனிப்பட்ட எம்எல்ஏவின் தனிப்பட்ட கருத்து இல்லை, ஒட்டுமொத்த பாஜகவின் கருத்து என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.” என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

‘நமது அதிகாரம்’ என்று தலைப்பிடப்பட்ட 20 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டு சமாஜ்வாதி

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், உத்தரப் பிரதேச பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாதி கட்சி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும், பயிர்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைகளின்படி குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும் முதலான முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

முதல் கட்ட வாக்குப் பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், உத்தரப் பிரதேச பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாதி கட்சி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. லக்னோவில் உள்ள கட்சி தலைமையகத்தில் மூத்த தலைவர்களுடன் இணைந்து அகிலேஷ் யாதவ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதில் வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் சமூக நீதி நிலைநாட்டப்பட வழிவகை செய்யப்படும் என்பது உள்பட பல்வேறு முக்கிய அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
1. அனைத்து பயிர்களுக்கும், பாலுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை. இதன் கணக்கீடு எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரையின்படி அமையும்.
2. அனைத்து விவசாயிகளுக்குமான MSP-க்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்படும்
3. அனைத்து விவசாயக் கடன்களும் ரத்து செய்யப்படும். நிலமற்ற விவசாயிகளின் கடன் உட்பட அனைத்தும் 2024-க்குள் தள்ளுபடி செய்யப்படும்.
4. விவசாயிகளுக்கான நீர்ப்பாசனம் இலவசமாக வழங்கப்படும்.
5. விவசாயிகளுக்கு கடன் வழங்குவதை ஆராய ஒரு குழு அமைக்கப்படும். இதன் மூலம் விவசாயிகளுக்கு உரிய முறையில் நிவாரணம் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
6. சிறு, குறு விவசாயிகள், நிலமற்ற அல்லது வாடகை நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.5000 ஓய்வூதியம் வழங்கப்படும்.
7. மாநிலத்தின் பிரதான விவசாய மாவட்டங்கள் அனைத்திலும் 10 கிலோமீட்டருக்கு ஒரு சந்தை அமைக்கப்படும்.
8. கரும்பு விவசாயிகளுக்கான நிதியை நிலுவையில்லாமல் வழங்க ஏதுவாக ரூ.10 ஆயிரம் கோடி சுழல் நிதி ஏற்படுத்தப்படும்.
9. தனியார் விவசாய கூலிகளுக்கு ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம் அவர்கள் கூலியின் 40 சதவீதம் வழங்கப்படும்.
10. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கூலி ரூ.450 ஆகவும், வேலை நாட்கள் 150 ஆகவும் அதிகரிக்கப்படும்.
11. நாடாளுமன்ற கூட்டத்தின் முதல் அமர்விலேயே ஊரக வேலை உறுதித் திட்டம் போல் நகர்ப்புற வேலை உறுதித் திட்டம் ஒன்றும் உருவாக்கப்பட்டு அமலுக்குக் கொண்டுவரப்படும்.
12. அனைத்து அரசு காலிப் பணியிடங்களும் உடனடியாக நிரப்பப்படும்.
13. தேசிய வேலைவாய்ப்பு கொள்கை உருவாக்கப்படும்.
14. நாடு முழுவதுமான இளைஞர்களுக்கு இலவச மடிக் கணினி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
15. அரசு தேர்வு வினாத்தாள் கசிவு, அரசுத் தேர்வில் ஊழல்கள் அகற்றப்படும் போன்ற அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

‘நமது அதிகாரம்’ என்று தலைப்பிடப்பட்ட 20 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய அகிலேஷ் யாதவ், “நாங்கள் எங்களது தேர்தல் அறிக்கைக்கு நமது அதிகாரம் எனத் தலைப்பிட்டுள்ளோம். அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டும், ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும், ஊடக சுதந்திரத்தை, சமூக நீதியை பாதுகாக்க வேண்டும் என்ற பார்வையுடன் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

சமூக நீதியை நிலைநாட்டுவது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் சாத்தியப்படாது. அது தேசத்தின் வளர்ச்சிக்கான அச்சு. சாதிவாரி கணக்கெடுப்பை இனியும் தள்ளிப்போடக் கூடாது. ஆகையால் 2025க்குள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு 2029க்குள் அது முழு வீச்சில் சமூக நீதியை நிலைநாட்டும்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.