தமிழக நெடுஞ்சாலைத் துறைசெயலர் ஆர்.செல்வராஜ் வெளியிட்ட அறிக்கையில், ‘நெடுஞ்சாலைத் துறையின் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில், தற்போது உள்ள சிலஅலகுகள் மாற்றி அமைக்கப்படும். செயல் திறனை மேம்படுத்த, இத்துறை மறு சீரமைக்கப்படும். நிபுணத்துவம் வாய்ந்தபொறியாளர்களுடன் பாலங்கள்சிறப்பு அலகு உருவாக்கப்படும்’என்று சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவித்திருந்தார்.
இதையடுத்து, நெடுஞ்சாலை துறையில் தற்காலிக பணியிடங்களை நிரந்தரம் செய்வது குறித்தும் 5 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள பணியிடங்களின் தேவை குறித்து பரிசீலிக்கவும், அமைச்சரின் அறிவிப்புகள் தொடர்பாகவும் விரிவாக ஆய்வு செய்து பரிந்துரைவழங்க 5 பேர் குழுவை நியமிக்குமாறு அரசுக்கு துறையின் முதன்மை இயக்குநர் கருத்துரு அனுப்பினார்.
இதை அரசு ஆய்வு செய்ததன்பேரில், நெடுஞ்சாலை துறையில் சீரமைப்பு, பாலங்கள் சிறப்பு ஆய்வு அலகு உருவாக்குதல் போன்றவை குறித்து விரிவாக ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைக்க ஆய்வு குழு அமைக்கப்படுகிறது.
அதன்படி, சென்னை முதன்மை இயக்குநர் இரா.செல்வதுரை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன தலைமை பொது மேலாளர்ச.பழனிவேல், சென்னை தேசியநெடுஞ்சாலை துணை தலைமை பொறியாளர் டி.சிவக்குமார், நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் – பராமரிப்பு தலைமை பொறியாளர் கு.கோ.சத்திய பிரகாஷ், கண்காணிப்பு பொறியாளர் ஆர்.கிருஷ்ணசாமி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்படுகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.