Sanjay Singh: நரேந்திர மோடி ஊழல் குறித்து பேசும்போது, ​​ஒசாமா பின்லேடனும், கப்பர் சிங்கும் அகிம்சையைப் போதிப்பது போல் தெரிகிறது

டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்க்கண்டு முதலமைச்சர ஹேமந்த் சோரன் ஆகியோர் கைதை கண்டித்து I.N.D.I.A. கூட்டணி கட்சியின் கூட்டம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருந்த ராகுல் காந்தி திடீர் உடல்நலக்குறைவால் கூட்டத்தை தவிர்த்துள்ளார். இதனை அறிவித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “ராகுல் காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், அவரால் இன்று டெல்லியை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. அதேநேரத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூட்டத்தில் பங்கேற்பார்” என தெரிவித்திருந்தார்.

I.N.D.I.A. கூட்டணி சார்பில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, பஞ்சாப் முதலமைச்சர் பகவந் சிங் மான், அர்விந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடி ஊழல் குறித்து பேசும்போது, ​​ஒசாமா பின்லேடனும், கப்பர் சிங்கும் அகிம்சையைப் போதிப்பது போல் தெரிகிறது. ஊழலுக்கு எதிராகப் பேசுகிறார் நரேந்திர மோடி. ஆனால் ஹேமந்த் சோரன், கேஜ்ரிவாலை பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளார். இப்போது மோடி வாஷிங் பவுடர் வந்துள்ளது. அது உங்கள் ஊழல்கள் அனைத்தும் தூய்மையாக்கும்” என பேசினார்.

சஞ்சய் சிங் குற்றச்சாட்டு: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு சதித்திட்டமே பாஜகவால் தீட்டப்பட்டது…!

நாட்டின் தலைநகரம் டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரவிந்த் கேஜ்ரிவால் முதலமைச்சராக பதவி வகிக்கின்றார். கடந்த 2021 -ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 -ஆம் தேதி டெல்லி அரசால் கலால் கொள்கை அமல்படுத்தப்பட்டு புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது.

அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. 2022 -ஆம் ஆண்டு ஜூலை 31 புகார் எழுந்ததையடுத்து கலால் கொள்கை டெல்லி அரசால் ரத்து செய்யப்பட்டது.

இந்த கலால் கொள்கைக்கு ஏராளமான முறைகேடுகள் என்று புகார்கள் எழுந்தன. அதாவது, மது விற்பனை செய்ய லைசன்ஸ் பெற்றவர்களுக்கு ரூ.144.36 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், விதிகள், செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு நிறுவனத்தின் ரூ.30 கோடி மதிப்பிலான டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது குறித்து சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்திருந்தார். இதனையடுத்து அமலாக்கத்துறையும், சிபிஐ-யும் வழக்கு விசாரணையை கையில் எடுத்தன. இந்நிலையில், டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயருக்குப் பிறகு இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்றாவது ஆம் ஆத்மி தலைவர் சிங் ஆவார்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் மதுபான கொள்கையில் முறைகேடு விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை கடந்த நவம்பர் முதல் 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் 8 சம்மன்களையும் அரவிந்த் கேஜ்ரிவால் தொடர்ந்து நிராகரித்து வந்தார். இதனை தொடர்ந்து கேஜ்ரிவாலை கடந்த 21-ம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது.

இதனிடையே, டெல்லி கலால் ஊழல் தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா உறுப்பினருமான சஞ்சய் சிங்குக்கு அமலாக்க இயக்குனரகம் எதிர்ப்புத் தெரிவிக்காததால், உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 2 ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு சதித்திட்டமே பாஜகவால் தான் தீட்டப்பட்டது என ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் பாஜக மீது பரபரப்பு புகார் தெரிவித்தார். மேலும் பாஜக மூத்த தலைவர்கள் பலரும் மதுபானக் கொள்கை முறைகேடு சதியில் சம்பந்தப்பட்டுள்ளதாக சஞ்சய் சிங் புகார் தெரிவித்தார்.