கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பையன் என்பவரது மகன் லாரி டிரைவர் பிரகாஷ். இவருக்கு சத்யா என்பவருடன் திருமணமாகி இவர்களுக்கு 13 வயதில் ஆதவன் என்ற மகனும், அக்ஷயா, அதிஷயா என்ற 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில், அதிசயா அதே கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
அதன் பிறகு அதிசயாவைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை பிரகாஷ் சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை வழக்குப்பதிவு செய்து, காணாமல் போன சிறுமியை தீயணைப்பு துறையினருடன் சேர்ந்து கிராமத்தில் உள்ள கிணறுகள், ஏரிகள், குளங்களில் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், அதே கிராமத்தில், அன்றைய தினம் கொண்டாடப்பட்ட முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடந்து கொண்டிருந்த போது,சிறுமி அதிசயா காணாமல் போனதால், எங்கு பார்த்தாலும் சோகத்துடன் தேர் திருவிழாவை கூட கொண்டாட முடியாமல் கிராமமே சோகத்தில் மூழ்கியது.
இதையடுத்து காவல்துறை மோப்ப நாய்களை வரவழைத்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் காணாமல் போன சிறுமியை தேடும் பணியில் தீவிரம் காட்டினர். இதையடுத்து கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி மற்றும் காவல்துறையினர் சம்பவம் நடந்த பூட்டை கிராமத்திற்கு வந்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், மாவட்ட கூடுதல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் 10 பேர் கொண்ட தனிப்படை காவல்துறையினர் சிறுமி அதிசயாவைத் தேடி வந்தனர். பின்னர் ஒரு கட்டத்தில் அதிசயாவின் தந்தை பிரகாஷ் மற்றும் தாய் சத்யாவிடம் காவல்துறையினர் தனித்தனியாக விசாரணை நடத்தினர். பின்னர் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது சத்யா கூறிய தகவலும், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளும் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதை உறுதி செய்தனர். அதில், மகளை சத்யா அழைத்துச் சென்றது பதிவாகி இருந்தது.
பின்னர் சத்யாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது,மகளை கிணற்றில் வீசி கொன்றதை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தபோது, சத்யா”அதே ஊரில் பல்வேறு நபர்களிடம் ரூ.4 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கியுள்ளேன். இந்தக் கடன் குறித்த விவரம் அவரது கணவருக்கும், குடும்பத்தினருக்கும் தெரியாது.
குறிப்பிட்ட காலத்திற்குள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. கடன் வாங்கியவர்களிடம் கூறிய காலக்கெடு முடிவடையும் நேரத்தில் குழந்தையை கொன்றால், கடன் கொடுத்தவர்கள் அனுதாபப்பட்டு, கடனை கேட்காமல் சென்று விடுவார்கள் என நினைத்து, சம்பவத்தன்று எனது மகளை சாலையோர கிணற்றில் கொலை செய்தேன்”என வாக்குமூலம் அளித்துள்ளார்.