கஸ்தூரி கோஷம்: அரசியல் அராஜகம் ஒழிக..! நீதி வெல்லட்டும்..!

அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும் என நீதிமன்ற வளாகத்தில் இருந்து காவல் பாதுகாப்புடன் வெளியே வந்த நடிகை கஸ்தூரி காவல்துறை வாகனத்தில் ஏறும் போது கோஷமிட்டார். பிராமணர்கள் பாதுகாப்பு கோரி சென்னை எழும்பூரிலுள்ள ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசுகையில், நான் ஹைதராபாத்துக்கு குடிபெயர்ந்து 4 வருஷம் ஆகுது.. இங்க சினிமாவை விடுங்க.. தொலைக்காட்சிகளில் நடுவர் ஆக கூட எனக்கு வாய்ப்பு தரக் கூடாது என மேலிடத்தில் இருந்து பிரஷர் தருவதாக சொல்கின்றனர்.

சுதந்திரப் போராட்டத்தில் உயிரைக் கொடுத்தவர்கள் பெரும்பாலானவர்கள் அந்தணர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ் அந்தணர்கள். தமிழர்கள். ஆரிய வந்தேறி.. ஆரிய வந்தேறி என்கிறார்கள்.. யார் ஆரிய வந்தேறி? கைபர் போலன் வழியாக பல மதத்தினர் வந்தாங்க.. அதை எல்லாம் பேச ஆரம்பிச்சா உங்க ஓட்டுதானே குறையும்.. 4,000 வருஷத்துக்கு முன்னாடி வந்ததாக சொல்லப்படுவதைப் பற்றி சொல்றீங்களே.. ஆரியர்கள் இங்கே வருகை தந்த போது ஷத்ரியர்கள் இடத்தில் வன்னியர்கள் இணைந்து கொண்டார்களோ, வைசியர் பாகுபாட்டில் செட்டியார்கள், முதலியார்கள், வேளாளர்கள் இணைந்து கொண்டார்களோ கோவில் பணிகளைச் செய்கிறவர்களில் சிவாச்சாரியார்கள், ஐயர்கள், ஐயங்கார்கள் , பண்டாரங்கள் போன்றவர்கள் இணைந்து கொண்டார்கள்.

300 வருஷம் முன்னாடி ஒரு ராஜாவுக்கு கூட சேர்த்துகிட்ட அந்தப்புர மகளிரோ சேவைகள் செய்ய வந்தவர்கள் எல்லாம் தெலுங்கு பேசுகிறவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் இனம் அப்படின்னு சொல்லும்போது எப்பவோ வந்த பிராமணர்களை நீங்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்? நீங்கள் யார் தமிழர்கள்?. அதனால்தானே தமிழர் முன்னேற்றக் கழகம்னு பெயர் வைக்க முடியமலை.. திராவிடர்கள் பெயர் கண்டுபிடிச்சீங்க என்றார். மேலும் ஜம்மு காஷ்மீர் போல தமிழ்நாட்டில் பிராமணர்கள் இனப்படுகொலை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது என கஸ்தூரி பேசியிருந்தார்.

இந்த கஸ்தூரியின் பேச்சுக்கு பலர் தனிநபர் தாக்குதல்கள் நடத்திய நிலையில், கஸ்தூரி மீது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கஸ்தூரியை காவல்துறை விசாரிக்கவுள்ளதை அறிந்த அவர் காவல்துறை சம்மன் அளிக்க வருவதற்குள் போயஸ் கார்டன் வீட்டை பூட்டிக் கொண்டு செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

இதையடுத்து கஸ்தூரியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதனிடையே மதுரை திருநகர், ஆண்டிப்பட்டி காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கஸ்தூரிக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து அவருடைய ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். இதையடுத்து கஸ்தூரியை கைது செய்ய காவல்துறை தீவிரம் காட்டி வந்தனர். கடந்த ஒரு வாரமாக கஸ்தூரியை தேடி வந்த நிலையில் அவர் ஹைதராபாத்தில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து தனிப்படை காவல்துறை அங்கு சென்று அவரை கைது செய்தனர்.

அவரை சாலை மார்க்கமாக சென்னை அழைத்து வரப்பட்டு சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு எழும்பூர் 5-ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி ராஜா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நடிகை கஸ்தூரியை வரும் 29-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அப்போது கஸ்தூரி, நீதிபதியிடம், நான் சிங்கிள் மதர், எனது இரு குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும். சொந்த ஜாமீனில் என்னை விடுவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஆனால் அவருக்கு ஜாமீன் தர நீதிபதி மறுத்துவிட்டார். இதையடுத்து புழல் சிறைக்கு அழைத்து செல்வதற்காக போலீஸ் வாகனத்தில் ஏறும் போது அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும் என கோஷமிட்டார்.