டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மேலூர் பகுதி மக்கள் வீட்டு வாசலில் ‘டங்ஸ்டன் திட்டம் வேண்டாம்” என்பதை வலியுறுத்தி கோலமிட்டு எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி, அ.வல்லாளப்பட்டி, நாயக்கர் பட்டி உள்ளிட்ட 11 கிராமங்களில் டங்ஸ்டன் எடுப்பதற்கான குத்தகை ஏல உரிமையை இந்துஸ்தான் நிறுவனத்திற்கு மத்திய சுரங்கதுறை அமைச்சகம் கொடுத்தது.
இந்த சுரங்க திட்டம் வந்தால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என சமீபத்தில் விவசாயிகள் மற்றும் வணிகர்கள் இணைந்து பேரணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே சட்டப்பேரவையில் இத்திட்டத்திற்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரிட்டாபட்டி பகுதி கிராம மக்கள், மேலூர் பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி கிராம மக்கள் ரேஷன் கடைகளில் வாங்காமல் புறக்கணித்தனர்.
இந்நிலையில், மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சியில் ஜல்லிக்கட்டு விழா காலை 7.35 மணிக்கு தொடங்கியது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளும், 900-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு விழாவைக் காண ஆயிரக்கணக்கானோர் பார்வையாளர்களாக வந்திருந்தனர்.
இதனிடையே, ஜனவரி 13 -ஆம் தேதி அரிட்டாபட்டி அருகே மீனாட்சிபுரம் கிராமத்தில் டங்ஸ்டன் சுரங்க திட்ட எதிர்ப்பு பொங்கல் விழாவை நடத்தவும், எதிர்ப்பு குலவையிடவும், கோலமிடவும் கிராம மக்கள் மற்றும் போராட்ட அமைப்பினர் திட்டமிட்டிருந்தனர். இதற்கு ஒத்தக்கடை காவல்துறை தடை விதித்த காரணத்தால் டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கல் விழா கொண்டாடப்படவில்லை.
அதே நேரம், ஜனவரி 14, 15, 16 ஆகிய 3 நாட்களாக வீட்டு வாசலில் டங்ஸ்டன் எதிர்ப்பு கோலங்களை இட்டு வருகின்றனர். அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம், நரசிங்கம்பட்டி, கம்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தினமும் டங்ஸ்டன் எதிர்ப்புக் கோலமிட்டு வருகின்றனர்.