உஷாரய்யா..! உஷார்..!! ஆன்லைன் மூலம் போலி பணி நியமன கடிதம் அனுப்பி ரூ.16¼ லட்சம் மோசடி..!

கோயம்புத்தூர் சாய்பாபாகோவில் அருேக கே.கே.புதூரை சேர்ந்த பி.இ. மெக்கானிக்கல் படித்து பிரித்திவ். இவர் கடந்த மே மாதம் முதல் வேலை தேடி வருகிறார். பிரித்திவ் செல்போனில் ஆன்லைனில் வேலை எதுவும் உள்ளதா? என்று பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது ஒரு ஆன்லைன் தளத்தில் வேலை இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து அவர் அந்த இணையதளத்திற்கு சென்று பார்த்தார். அதில் பிரபல முன்னணி நிறுவனங்களில் வேலைகளுக்கு ஆட்கள் தேவை என்று இருந்தது. இதையடுத்து அவர் தனது விவரங்களை ஆன்லைனில் அனுப்பினார். விண்ணப்பித்த சில நாட்களில் அந்த ஆன்லைன் தளத்தில் இருந்து பிரித்திவின் மெயிலுக்கு ஒருவர் தகவல் அனுப்பினர்.

அதில் அந்த நபர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு பிரபல கார் நிறுவனத்தில் வேலை உள்ளது என தெரிவித்தார். இதனை நம்பிய பிரித்திவ் ஆன்லைன் வழியாக அவர்களை தொடர்பு கொண்டார். அப்போது அவரிடம் நேர்முகத்தேர்வு நடத்தினர். இதில் வெற்றி பெற்றதால் வேலைக்கு சேர்வதற்கான பணிநியமன கடிதம் மற்றும் மாத சம்பளம் குறித்த தகவல்களையும் அவருக்கு ஆன்லைன் வாயிலாகவும், தபால் மூலமும் அனுப்பி உள்ளனா். இதையடுத்து அவரிடம் உங்களுக்கு ஆன்லைனில் சில நாட்கள் பயிற்சி கொடுக்கப்படும். அதனை தொடர்ந்து சில வேலைகள் உங்களுக்கு என்று கொடுக்கப்படும். அதனை நீங்கள் செய்து முடிக்க வேண்டும். வேலைக்கு சேரும் முன்பு ஆன்லைனில் நாங்கள் கொடுக்கும் பயிற்சி, கார் நிறுவனத்தில் பணி என்பதால் உங்களுக்கு என்று தனியாக டூல்ஸ் வாங்க குறிப்பிட்ட தொகை உள்பட அனைத்துக்கும் நீங்கள் பணம் செலுத்த வேண்டும் என கூறி உள்ளார்.

வேலை கிடைத்துவிட்டது என்ற நம்பிய பிரித்திவ், தனது பெற்றோர் மற்றும் நண்பர்களிடம் இருந்து வாங்கி, அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணைகளாக கடந்த 27-5-2023 முதல் 16-6-2023 வரை ரூ.16 லட்சத்து 25 ஆயிரத்து 277-ஐ அனுப்பி உள்ளார். பின்னர் அந்த நபர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. பலமுறை மெயில் அனுப்பியும் பதிலளிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பிரித்திவ் பணி நியமன கடித்தத்துடன் பெங்களூருவில் உள்ள பிரபல கார் நிறுவனத்திற்கு சென்றார். அப்போது தான் அது போலி பணி நியமன ஆணை என்பது தெரியவந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பிரித்திவ், இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார். இதன்பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரைண நடத்தி வருகின்றனர்.

எந்த ஜாதியும் மதமும் இல்லை.. சான்றிதழ் பெற்ற கோவை தம்பதி..!

இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் ஜாதி சண்டை, மத சண்டைகள் நாடெங்கும் அரங்கேறும் நிலையில், கோயம்புத்தூர் பீளமேடு காந்தி நகரைச் சேர்ந்த பிரலோப், இவரது மனைவி பீனா ப்ரீத்தி. இவர்களது மகள் ஹாதியா. இந்த குழந்தைக்கு ஜாதி, மதம் இல்லை என குறிப்பிடும் வகையில் சான்றிதழ் வாங்க வேண்டும் என பெற்றோர் முடிவு செய்தனர்.

இதற்காக அவர்கள் கோயம்புத்தூர் வடக்கும் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர். விண்ணப்பத்தை பரிசீலித்த அதிகாரிகள் நேற்று பிரலோப்- ப்ரீத்தி தம்பதியின் குழந்தை ஹாதியாவுக்கு ஜாதி, மதம் இல்லை என்ற சான்றிதழை வழங்கினர்.

அதில் ஹாதியாவுக்கு ஜாதி, மதம் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஹாதியாவின் பெற்றோர் கூறுகையில், எல்லோரும் இந்தியர்கள் என்ற மனநிலை மட்டும் இருந்தாலே போதும். எங்கள் மகளை ஜாதி, மதம் என்ற வட்டத்தில் வைத்து அவளை பிரிக்க வேண்டாம் என முடிவு செய்தோம். இப்படி சான்று பெற்றால் எதிர்காலத்தில் எங்கள் குழந்தைக்கு ஜாதி ரீதியில கிடைக்கும் எந்த ஒரு சலுகையும் கிடைக்காது என்பது எங்களுக்கு தெரியும்.

அதெல்லாம் வேண்டாம் என்று தெரிந்துதான் ஜாதி, மதம் இல்லை என்ற சான்றிதழை எங்கள் குழந்தைக்கு பெற்றோம். அந்த சான்றிதழை பெறுவதற்கு சிறிது காலதாமதம் ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் இதை ஏன் வாங்குகிறீர்கள் என கேட்டனர். அவர்களுக்கு இது போல் சான்று அளிப்பது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை என்றே தெரிகிறது.

தமிழக அரசு ஏற்கெனவே பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் போது பெற்றோர் விரும்பினால் மாற்று சான்றிதழில் ஜாதி, மதமில்லை என குறிப்பிடலாம். இல்லாவிட்டால் அந்த கேள்விகளுக்கு எதையும் ஃபில்லப் செய்யாமல் அப்படியே விட்டுவிடலாம். எங்களை போல் பலரும் தங்கள் குழந்தைகளுக்கு ஜாதி, மதம் இல்லாத சான்று பெற விரும்புகிறார்கள்.

ஆனால் எப்படி விண்ணப்பிப்பது என தெரியாமல் இருக்கிறார்கள். எனவே ஜாதி சான்று வாங்குவதற்கு தகவல்களை அரசாங்கம் கொடுப்பது போல் ஜாதி சான்று வேண்டாம் என்பதற்கும் அரசாங்கம் வழிகாட்ட வேண்டும் என அந்த தம்பதி தெரிவித்தனர். கடந்த 2013 -ம் ஆண்டு ஜூன் 6-ம் தேதி அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும், தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அலுவலகம் அனுப்பியுள்ள கடிதத்தில் மாணவர்களை பள்ளியில் சேர்க்கும்போது சம்மந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர், பாதுகாவலர் விருப்பப்பட்டால் அந்த மாணவனின் பள்ளிச் சான்று, பள்ளி மாற்றுச் சான்றிதழ்களில் சாதியில்லை, மதமில்லை என்று குறிப்பிடவோ அல்லது அந்த வினாக்களுக்கு எதிரான இடத்தில் காலியாக விடவோ விரும்பினால், சம்பந்தப்பட்டவரின் விருப்பக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டு அவர்களின் விருப்பப்படியே சான்று வழங்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிஐஜி விஜயகுமார் சொந்த ஊர் தேனியில் இறுதிச்சடங்கு…!

கோயம்புத்தூர் சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்று தமிழகத்தையே பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் சரக டிஐஜி விஜயகுமாரின் உடல் இறுதிச்சடங்கிற்காக அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகே அணைக்கரைப்பட்டியை பூர்வீகமாக கொண்டவர் டிஐஜி விஜயகுமாரின் தந்தை வெள்ளையா கிராம நிர்வாக அலுவலராகவும், தாய் ஆசிரியையாகவும் இருந்து ஓய்வு பெற்றவர்கள். கடந்த 2003ஆம் ஆண்டு குரூப் 1 தேர்வு மூலம் நேரடி டி.எஸ்.பி.யாக பணியில் சேர்ந்த இவர் அதன் பிறகு சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதி அதில் தேர்ச்சி பெற்றி 2009-ம் ஆண்டு விஜயகுமார் ஐ.பி.எஸ். ஆனார்.

தேனி மண்ணிற்கேற்ற வீரமும், தீரமும் விஜயகுமாரிடம் நிறையவே இருந்ததால் சவாலான கேஸ்களையும் சாதுர்யமாக கையாண்டு உயர் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் பெற்று வந்தார். காஞ்சிபுரம், கடலூர், நாகை மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக இருந்த அவர் சென்னை அண்ணா நகர் துணை ஆணையராகவும் பணியாற்றியிருக்கிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் டிஐஜி ஆக புரோமோஷன் வழங்கப்பட்டு கோயம்புத்தூரில் பணியமர்த்தப்பட்டார். மகன் காவல்துறையில் உயர் பொறுப்புகளை வகித்தும் அரசு குடியிருப்புகளில் அவர் இருந்தும் சொந்த ஊரான தேனியிலேயே வசித்து வருகிறார்கள் டிஐஜி விஜயகுமாரின் பெற்றோர்.

தேனி ரத்தினம் நகரில் உள்ள விஜயகுமார் இல்லத்தில் உறவினர்கள் குவிந்து வருகின்றனர். மகனின் மறைவுச் செய்தி அறிந்து விஜயகுமாரின் அம்மா துடிதுடித்து அழுதது காண்போரை கண்கலங்கச் செய்தது. கோயம்புத்தூரில் உடற்கூராய்வு முடிந்த பின்னர் இறுதிச்சடங்கிற்காக டிஐஜி விஜயகுமாரின் உடல் தேனி கொண்டு செல்லப்படவுள்ளது. இதனிடையே தேனி மாவட்ட காவல்துறையினர் அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை கவனித்து வருகின்றனர்.

சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை: தீவிர விசாரணை நடத்த அண்ணாமலை வலியுறுத்தல்

கோயம்புத்தூர் சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பின்னணி குறித்து தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கையில், கோயம்புத்தூர் சரக டிஐஜி திரு. விஜயகுமார் ஐபிஎஸ் அவர்கள், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்காக ஓய்வு பெற்ற நீதியரசர் திரு சி.டி. செல்வம் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கை என்ன ஆனது? காவல்துறையினரின் பணிச்சுமையை குறைக்க, தமிழக காவல்துறையில் உள்ள 10,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப @CMOTamilnadu எடுத்த நடவடிக்கைகள் என்ன? காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவரின் தற்கொலை என்பது அத்தனை எளிதாகக் கடந்து செல்ல முடியாது. இந்த தற்கொலைக்கு பின்னணி என்ன என்று, தமிழக அரசு, தீவிர விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க @BJP4Tamilnadu சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கல்வி உதவித்தொகை பெற்று தருவதாக ரூ.7 லட்சம் நூதன மோசடி

நாடு முழுவதும் பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் மேற்படிப்பிற்கு விண்ணப்பித்து உள்ளனர். இவர்களில் பலர் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பித்து இருந்தனர். அவர்களை குறி வைத்து அரசின் கல்வி உதவித்தொகை பிரிவில் இருந்து பேசுவதாக கூறி ஒரு கும்பல் மோசடியை அரங்கேற்றியது.

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களின் பெற்றோர் விவரங்களை ஆன்லைன் மூலமாக சேகரித்த கும்பல், அவர்களை செல்போன் மற்றும் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு உங்களது மகன் மற்றும் மகளுக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்துள்ளது என அரசு அலுவலர்கள் போல் பேசி, அந்த கும்பல் வாட்ஸ் அப் ப்ரோபைலில் தமிழ்நாடு அரசின் லோகோவை வைத்துள்ளனர். தொடர்ந்து வாட்ஸ் அப்பில் கியூ.ஆர்.கோடு அனுப்பி உங்களுக்கு ஸ்காலர்ஷிப் பணம் அனுப்பி வைக்கப்பட்டதாக போட்டோ எடுத்து அனுப்பி உள்ளனர்.

இதனை உண்மை என நம்பி கியூஆர் கோடை அழுத்தியவுடன் அவர்கள் வங்கிக்கணக்கில் உள்ள மொத்த பணமும் மர்ம நபர்களின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டது. இதேபோல், கோயம்புத்தூரில் 7 பேரிடம் ரூ.7 லட்சத்திற்கும் மேல் மோசடி நடைபெற்றுள்ளது. அந்த கும்பலிடம் பணத்தை இழந்தவர்கள், கோயம்புத்தூர் மாநகர சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தனர். இது குறித்து காவல் ஆய்வாளர் அருண் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த மோசடியில் நாமக்கல் மாவட்டம் சவுரிபாளையத்தை சேர்ந்த டேவிட், லாரன்ஸ்ராஜ், மாணிக்கம், சகாயராஜ், எட்வின் மற்றும் ஜேம்ஸ் ஆகிய 5 பேர் ஈடுபட்டது தெரிய வந்தது. உடனே அவர்கள் 5 பேரும் கைது செய்து, இந்த கும்பலிடம் இருந்து 44 செல்போன்கள், 22 சிம்கார்டுகள், 7 ஏ.டி.எம். கார்டுகள், 1 காசோலை, 7 வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டது. மேலும் இதில் வங்கி கணக்குகள் மற்றும் சிம்கார்டு ஆகியவற்றை டெல்லி முகவரியில் வாங்கி உள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் தமிழகம் முழுவதும் 500 பேரிடம் நூதன முறையில் பண மோசடி செய்து இருக்கலாம் என பது தெரிய வருகிறது.

ஜாதி மறுப்பு திருமணம்..! 3 மாத குழந்தை பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு கொடூர கொலை..!

மதுரை மதிச்சியம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக ஷேக்ஸ்பியர் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. சாந்தி ஷேக்ஸ்பியர் தம்பதியின் மகள் ஐஸ்வர்யா, பாஸ்கரன் என்பவரைக் காதலித்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். ஐஸ்வர்யா, பாஸ்கரன் தம்பதியினர் கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் சேரன் நகர் நாகப்பா காலனி பகுதியில் குடியிருந்து வருகின்றனர்.

இவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இரட்டை குழந்தை பிறந்தது. மகளுக்கு இரட்டை குழந்தை பிறந்த தகவலை அறிந்த சாந்தி மகளுடன் நெருக்கமாக பழகி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மதுரையிலிருந்து கோயம்புத்தூர் கவுண்டம்பாளையத்திலுள்ள மகள் வீட்டிற்கு வந்துள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களாக சாந்தி இவர்களுடன் தங்கியிருந்து குழந்தைகளை அன்பாக கவனித்தும், பராமரித்தும் வந்துள்ளார். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு ஐஸ்வர்யா மருத்து வாங்குவதற்கு கடைக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு பூட்டிக் கிடந்தது. கதவை பலமுறை தட்டிய பிறகே சாந்தி கதவைத் திறந்து வெளியே வந்தார். அப்போது ஐஸ்வர்யா தனது குழந்தைகளைத் தேடியபோது, ஆண் குழந்தை படுக்கையில் தூங்கிய நிலையில் இருந்துள்ளது.

பெண் குழந்தையைத் தேடியபோது, அந்தக் குழந்தை வீட்டின் கழிவறை குழாய்க்குள் அழுத்தி துணியை வைத்து மூடப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து பெண் குழந்தையை மீட்ட ஐஸ்வர்யா, படுக்கையில் கிடந்த ஆண் குழந்தையைத் தூக்கச் சென்றபோது குழந்தையின் பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஐஸ்வர்யா கண்ணீர் விட்டுக் கதறி அழுதார்.