சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி லஞ்சஒழிப்பு காவல்துறை சோதனை…! ரூ.5 ஆயிரம் ரொக்கத்துடன் சிக்கிய ஊழியர்..!

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு காவல்துறை அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது பேரூராட்சி அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்க்கும் நடராஜ் என்பரிடம் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் இருப்பது தெரிய வந்தது. எனவே காவல்துறை அந்த பணம் எப்படி வந்தது என்று கேட்டனர். இதற்கு நடராஜிடம் சரியான பதில் அளிக்கவில்லை. எனவே அந்த பணத்தை லஞ்சஒழிப்பு காவல்துறை பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து பேரூராட்சி ஊழியர் நடராஜை லஞ்சஒழிப்பு காவல்துறை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது சூளேஸ்வரன்பட்டியில் அரசு வேலைகளை செய்து தருவதற்காக பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கியதாக, பேரூராட்சி ஊழியர் நடராஜை காவல்துறை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தயம் காலனி பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்ட வீடுகளை நீதிமன்ற உத்தரவின்பேரில் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில் தார் மனோஜ் முனியன் தலைமையில் வருவாய்த்துறையினர் இடித்து அகற்றினார்கள். அப்போது சில வீடுகளின் பிற பகுதிகள் சேதம் அடைந்ததாக தெரிகிறது. இதனால் தனி தாசில்தார் மனோஜ் முனியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதனைக் கண்டித்து கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை கள்ளக்குறிச்சி தாசில்தாரை அரசியல் காரணங்களுக்காக பணியிடை நீக்கம் செய்ததை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தாசில்தார் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று வால்பாறை தாசில்தார் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல கோயம்புத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

உண்டு உறைவிட பள்ளியில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டம்..!

கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை பகுதியில் உள்ள மலையாள மொழி பேசும் மக்கள் கடந்த ஒரு வாரமாக தங்களது வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகைக்கான தயாரிப்பு பணிகளை செய்து வந்தனர். நேற்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு அவர்களது பாரம்பரிய உடையணிந்து, அத்தப்பூ கோலமிட்டு வழிபாடு நடத்தினார்கள். பின்னர் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ளவர்களை அழைத்து வடை பாயாசத்துடன் 16 வகையான சைவ உணவுகளை வழங்கி ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

வால்பாறை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள வால்பாறை சுற்று வட்டார பகுதியில் இருக்கும் மலைவாழ் கிராம மக்களின் பிள்ளைகள் படிக்கும் உண்டு உறைவிடப் பள்ளியில் மாணவ-மாணவிகள் ஓணம் உடையணிந்து அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை..!

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே மரபேட்டையில் உள்ள பொட்டு மேடு பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு நாட்டுக்கல்பாளையத்தை சேர்ந்த சக்திநாராயணனுக்கு சொந்தமான நிலத்தை சுத்தம் செய்ய அவரது டிரைவர் கலைபிரபு சென்றார்.

அவர், பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணை கொட்டியபோது, குடியிருப்புகளின் வழித்தடத்தை மறைத்து கொட்டியதாக கூறப்படுகிறது.இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள், அவரை தடுத்து நிறுத்தினர். உடனே அவர்களுடன், கலைபிரபு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது சாதி பெயரை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மகாலிங்கபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே காவல்துறை, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தெருவிளக்குகள் அமைக்காததை கண்டித்து கவுன்சிலர்கள் வாக்குவாதம்

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை நகராட்சி மன்ற அவசர கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் அழகு சுந்தரவள்ளி தலைமை தாங்கினார். துணை தலைவர் செந்தில்குமார், ஆணையாளர் பெர்ப்பெற்றி டிடெரன்ஸ்லியோன் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் பேசும்போது, ஒவ்வொரு வார்டு பகுதிக்கும் தெருவிளக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு 3 மாதங்களாகியும் எந்த ஒரு வார்டு பகுதியிலும் தெருவிளக்குகள் அமைக்கப்படவில்லை. என்று கூறி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கூட்டத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. தெருவிளக்குகள் அமைக்கும் பணி அப்போது ஒரு மாதத்தில் கணக்கெடுப்பு பணி முடிந்தவுடன் மூன்று மாதத்திற்குள் அனைத்து வார்டு பகுதியிலும் தெருவிளக்குகள் அமைக்கும் பணி தொடங்கப்படும் என்று ஆணையாளர் தெரிவித்தார்.

2 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் போர்டு உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கல்

கோயம்புத்தூர் மாவட்டம், சூளேஸ்வரன்பட்டி .எம். ஜி. நகரில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அவர்கள் தனது தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் போர்டு வழங்கி ஸ்மார்ட் வகுப்பினை துவக்கி வைத்தார். இனிய நிகழ்வில் பேரூராட்சி அதிமுக கழக நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள் திரளான மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.