சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி: ஏப்ரல் 21 -க்குள் கொடி கம்பங்களை அகற்று…! இல்லனா வழக்கு போடு..!

தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் கொடிக்கம்பங்களை ஏப்ரல் 21 -ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் இறுதி கெடு கொடுத்துள்ளது.சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராகேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து இருந்த பொது நல வழக்கில் ராயபுரம் பகுதியில் நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியின் கொடிக்கம்பத்தையும் கல்வெட்டையும் அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே ஆர் ஸ்ரீராம் மற்றும் முகமதுசபீக் ஆகியோர் அடங்கி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் ஏற்கனவே மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதி ஜி.கே. இளந்திரையன், தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்ததாகவும், தனி நீதிபதியின் உத்தரவை நீதிபதி நிஷாபானு தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார். இதை பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி அமர்வு வரும் ஏப்ரல் 21 -ஆம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் உள்ள கொடிக்கம்படங்களை அகற்றப்பட வேண்டும். *அப்படி அகற்றவில்லயெனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தொடரலாம் எனக்கூறி இந்த வழக்கை முடித்து வைத்தார்.

தவெக கொடி கட்டிய கார்.. எங்க கிட்டயே காசு கேக்குறியா..!?

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் நிலையில், தவெக கட்சி தொண்டர்கள், சுங்கச்சாவடியில் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் 27 -ஆம் தேதி மாலை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ளது.

‘வெற்றிக் கொள்கை திருவிழா’ என்கிற வாசகத்துடன் மாநாடு நுழைவாயிலில் கோட்டையின் மதில் சுவர் போல செட் அமைக்கப்பட்டு அதில் 2 யானைகள் முன்னங் கால்களை உயர்த்தி பிளிரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டு திடலில் காமராஜர், பெரியார், அம்பேத்கர் ஆகியோருக்கு நடுவே விஜய் கட்-அவுட் ஜொலித்து கொண்டுள்ளது. மாநாட்டுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் மாநாட்டு ஏற்பாடுகளை ஒப்பந்ததாரர்கள் இரவு பகலாக செய்து வருகின்றனர்.

தற்போது மாநாட்டுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்து விட்டதாகத் தெரிகிறது. மாநாட்டிற்கு வருபவர்கள் அனைவருக்கும் தேவையான கழிப்பிட வசதி, தேவையான அளவுக்கு குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தவெக மாநாட்டு பந்தல் பகுதியில் 700-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரியமங்கலம் சுங்கச்சாவடியில், தவெக கட்சிக் கொடி கட்டிய காரில் வந்த நிர்வாகிகள், சுங்கக் கட்டணம் செலுத்தாமல் ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

தவெக கொடி பொருத்தப்பட்ட காரில் ஃபாஸ்டேக் இல்லாத நிலையில், சுங்கக் கட்டணம் செலுத்தாமல் செல்ல முயன்றதாகவும், டோல்கேட் ஊழியர்கள் காரை மறித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. விக்கிரவாண்டி மாநாட்டு பணிகளை பார்வையிட்டுவிட்டு வரும் எங்களிடம் டோல்கேட் கட்டணம் கேட்கிறாயா என தவெக நிர்வாகி ஒருவர் ஊழியர்களிடம் ஆவேசமாக கேட்டதாகவும் கூறப்படுகிறது.

தவெக நிர்வாகிகளுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, அங்கு ஏராளமான தவெக தொண்டர்கள் திரண்டு, சுங்கச்சாவடி ஊழியர்களை மிரட்டியதாகவும், ரோடே சரியில்லை, எதற்கு சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.