கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை: தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுப்பது எதிர்காலத்தில் பொது போக்குவரத்தை தனியார் மயமாக்கும்..!

தீபாவளிக்கு பொதுமக்களின் நலன் கருதி தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது, எதிர்காலத்தில் பொதுப்போக்குவரத்தை தனியாருக்கு விடும் நிலையை ஏற்படுத்திவிடும் என மாரக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது

இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. ஆனால், இச்சிறப்பு பேருந்துகள் இயக்கத்துக்கு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க அரசு முன்வந்துள்ள நடவடிக்கை ஏற்கத்தக்கல்ல.

தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக இருப்பதற்கு போக்குவரத்துக் கழகங்களின் சேவை முக்கிய பங்களிப்பு செய்துள்ளதை யாரும் மறுக்க இயலாது. குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடும் முக்கிய காரணமாகும். அரசு பேருந்துகளை கூடுதலாக இயக்குவதற்கு திட்டமிடுவதற்கு பதிலாக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது, அரசுக்கோ, பொதுமக்களின் நலனுக்கோ வலுசேர்க்காது.

இது எதிர்காலத்தில் பொதுப்போக்குவரத்தை தனியாருக்கு விடும் நிலையை ஏற்படுத்திவிடும். எனவே, தமிழக அரசு போக்குவரத்து துறையில், நேரடியாகவோ மறைமுகமாகவோ தனியார் துறையை அனுமதிக்கக் கூடாது என கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கே.பாலகிருஷ்ணன்: ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு யார்? யார்? சிறைக்கு செல்ல போகிறார்கள் என்பதை நாடு பார்க்கத்தான் போகிறது..!

சிவகாசியில் மார்க்சிஸ்ட் சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்றிரவு நடைப்பெற்றது, இதில் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், தென்காசி தொகுதி திமுக வேட்பாளர் ராணி குமார், ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி ஆகியோரை ஆதரித்து மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார்.

அப்போது மக்களவை தேர்தலில் பாஜக 200 இடங்களில் கூட வெற்றி பெறாது என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் 100 இடங்களில் கூட வெல்ல முடியாது. நாட்டில் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது என ஒன்றிய அரசின் உளவுத்துறை ரகசிய அறிக்கை தந்துள்ளது. அதனால் அவர் தூக்கத்தை தொலைத்து விட்டார். ஒரு மாநில முதல்வரை மோடி அரசு கைது செய்துள்ளது.

இது அமலாக்க துறையின் நடவடிக்கை என்கிறார்கள். அந்த துறை ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் துறையின் கீழ்தானே வருகிறது. ஏற்கனவே அம்மாநில துணை முதல்வரையும் கைது செய்து சிறை வைத்துள்ளனர். ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு யார்? யார்? சிறைக்கு செல்ல போகிறார்கள் என்பதை இந்த நாடு பார்க்கத்தான் போகிறது.

அதிகாரத்தை பயன்படுத்தி தொழிலதிபர்களை மிரட்டி தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.8 ஆயிரம் கோடியை பாஜக பெற்றுள்ளது. இது தொடர்பான சட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சிதான் வழக்கு தொடர்ந்தது. இந்திய வரலாற்றிலேயே நாடாளுமன்றத்துக்கு மிக குறைந்த நாட்கள் வந்த பிரதமர் மோடி மட்டும்தான். 19 முக்கிய சட்டங்களை எதிர்க்கட்சிகள் இல்லாமல் அவையில் நிறைவேற்றினர்.தமிழகம், புதுச்சேரியில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது நிச்சயம் என கே.பாலகிருஷ்ணன் பேசினார்.