அமைச்சர் பொன்முடி விஷயத்தில் நீதிமன்றம் கண்டித்த பின்னரும் அமைச்சர் பொன்முடி மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி என்றால் மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்முடியின் பேச்சை ரசிக்கிறாரா? என பா.வளர்மதி கேள்வி எழுப்பியுள்ளார்.
பொதுக்கூட்டம் ஒன்றில் அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்து அவதூறாக பேசியதை அடுத்து பல்வேறு அரசியல் கட்சிகள் சமூக அமைப்புகள் மற்றும் நீதிமன்றம் அவருடைய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். அவரது கட்சி பொறுப்பு பறிக்கப்பட்ட நிலையில் அவரது அமைச்சர் பதவியையும் பறிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
மதுரை மாவட்டம், மதுரை மாநகர் மாவட்ட அதிமுக மகளிரணி சார்பில் மதுரை செல்லூர் 60 அடி சாலையில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, பா.வளர்மதி ஆகியோர் தலைமையில் அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அவரது அமைச்சர் பதவியை பறிக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் பொன்முடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் அல்லது அமைச்சர் பொன்முடியே தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும் என கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பேசுகையில், பெண்களை இழிவுபடுத்துவது என்பது திமுகவிற்கு கைவந்த கலையாக உள்ளது
திமுகவினர் தமிழக பெண்களை தொடர்ந்து இழிவுபடுத்தி பேசி வருகிறார்கள். சட்டப்பேரவைக்கு சென்ற ஜெயலலிதாவை சேலையை பிடித்து இழுத்து திமுகவினர் அவமானப்படுத்தினர். அமைச்சர் பொன்முடி விஷயத்தில் மக்கள், நீதிமன்றம் கண்டித்த பின்னரும் அமைச்சர் பொன்முடி மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி என்றால் மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்முடியின் பேச்சை ரசிக்க ஆதரிக்கிறார் என நினைக்கிறேன். இதற்கு தமிழக மக்கள் தக்க நேரத்தில் தக்க பதிலடியை கொடுக்க வேண்டும் என பா.வளர்மதி தெரிவித்தார்.