கேரளாவில் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதால் இத்தகைய பேரிடர்கள் ஏற்படுகின்றன என்றும் பேரிடர்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் கேரள அரசு கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்றும் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
அம்மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே. ஜெயசங்கரன் நம்பியார், வி.எம். சியாம்குமார் அடங்கிய அமர்வு கூறுகையில், “மனிதனின் அக்கறையின்மை மற்றும் பேராசைக்கு இயற்கையின் எதிர்வினைதான் வயநாடு நிலச்சரிவு. இயற்கை நீண்டகாலத்துக்கு முன்பே நமக்கு எச்சரிக்கை விடுத்தது. கேரள அரசு அதன் வளர்ச்சிக் கொள்கையை மறுபார்வை செய்ய வேண்டும்.
இயற்கை வளங்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், காடுகள், கானுயிர் பாதுகாப்பு, இயற்கை பேரிடர் தடுப்பு, நிலையான வளர்ச்சி இலக்குகள் சார்ந்து மாநில அரசு கொண்டுள்ள கொள்கைகளில் புதிய அணுகுமுறை தேவை. இதுபோன்ற இயற்கைப் பேரிடர் ஏற்படுவதைத் தடுக்க விரிவான கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.