கேரளாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணியின் மகன் அனில் ஆண்டனி, முன்னாள் முதலமைச்சர் கருணாகரனின் மகள் பத்மஜா உள்பட சிலர் பாஜகவில் இணைந்தனர். இந்நிலையில் உம்மன் சாண்டியின் குடும்பத்தினரும் பாஜகவில் சேரப்போவதாக தகவல் பரவியது. இதனை தொடர்ந்து அதை அவரது மனைவி மரியாம்மா உம்மன் சாண்டி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதுகுறித்து மரியாம்மா உம்மன் சாண்டி பேசுகையில், சிலரைப் போல உம்மன்சாண்டியின் குடும்பத்தினரும் பாஜகவில் சேரப்போவதாக வதந்தியை பரப்பி வருகின்றனர். இதில் எந்த உண்மையையும் கிடையாது. இவ்வாறு கூறுவது உம்மன் சாண்டியின் ஆன்மாவுக்கு வேதனையை ஏற்படுத்தும். எங்கள் குடும்பம் கடைசி வரை காங்கிரஸ் பக்கம் தான் இருக்கும். தற்போது நடைபெறப்போவது மிக முக்கியமான தேர்தல் ஆகும்.
இனி ஒரு தேர்தல் இருக்குமா? என்பதே சந்தேகமாக இருக்கும் சூழ்நிலையில் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்காக முடிந்த வரை போராட வேண்டும். இது உம்மன்சாண்டி இல்லாத முதல் தேர்தலாகும். எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் வரும் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்வோம் என்றார். உம்மன் சாண்டி பலமுறை புதுப்பள்ளி தொகுதியில் போட்டியிட்ட போதிலும் இதுவரை அவரது மனைவி மரியாம்மா உம்மன் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. தற்போது இந்தத் தேர்தலில் முதன் முதலாக அவரும் பிரசாரம் செய்ய தீர்மானித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.