அரசு மருத்துவரை மிரட்டி பணம் பறித்த ஆய்வாளர் கைது

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த மகிதா அன்ன கிறிஸ்டி. இவர் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்தபோது, காட்டாங்குளத்தூரை சேர்ந்த ஒரு பெண், ‘தனது 17வயது மகளை திரிசூலம் பகுதியை சேர்ந்த ரஞ்சித், என்பவர் ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கினார்’ என கடந்த ஜூலை 2-ம் தேதி புகார் அளித்துள்ளார்.

அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலைய காவல்துறை போக்சோ சட்டத்தின் வழக்குப் பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்து, சிறையில் அடைத்தனர். முன்னதாக, கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த மகிதா அன்ன கிறிஸ்டி, சிறுமியின் தாயாரிடம் விசாரித்தபோது சிறுமிக்கு ஏற்கனவே இரண்டு‌முறை கருக்கலைப்பு செய்துள்ள அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். அதில் மறைமலை நகர் மற்றும் சிங்கபெருமாள் கோவிலில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளில் கருகலைப்பு செய்ததை கூறியுள்ளார்.

குறிப்பாக மலைமறைநகரில் உள்ள மருத்துவமனையில் சிறுமி கருவுற்றபோது மாத்திரைகள் வாங்கி கருக்கலைப்பு செய்ததாக கூறி உள்ளார். இதனைத் தொடர்ந்து கூடுவாஞ்சேரி காவல் நிலைய ஆய்வாளர் மகிதா அன்ன கிறிஸ்டி, மறைமலை நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர் உமா மகேஸ்வரியிடம் விசாரணை நடத்தி உள்ளார். மேலும், சிறுமியின் தாய் அளித்த வாக்குமூலத்தில் சிங்கபெருமாள் கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் மாத்திரைகள் வாங்கி கருக்கலைப்பு செய்ததாக கூறினார். இதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனைக்குச் சென்ற ஆய்வாளர் மகிதா அன்ன கிறிஸ்டி, அரசு மருத்துவர் பராசக்தியிடம் விசாரணை மேற்கொண்டு உள்ளார்.

அப்போது சட்ட விரோதமாக 17-வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ததற்கு வழக்குப்பதிவு செய்ய உள்ளதாக கூறியுள்ளார். வழக்கு பதிவதை தடுக்க மறைமலைநகர் மருத்துவர் உமா மகேஸ்வரியிடம் இருந்து 2-லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டுள்ளார். இந்த விவகாரம் வெளியில் கசிந்து தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு புகாராக சென்றுள்ளது. உடனடியாக தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் ஆய்வாளர் மகிதா அன்ன கிறிஸ்டியை அழைத்து விசாரணை செய்துள்ளார். அப்போது மகிதா அன்ன கிறிஸ்டி பணம் பெற்றது உறுதியானதால் அவரை பணியிடை நீக்கம் செய்து, வாங்கிய பணத்தை திருப்பி அளிக்கவும் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டிருந்தார்.

மேலும் இது தொடர்பாக அரசு மருத்துவர் பராசக்தி மறைமலைநகர் காவல் நிலையத்தில், தன்னை காவல் ஆய்வாளர் மகிதா அன்ன கிறிஸ்டி மிரட்டி பணம் பறித்ததாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். இது தொடர்பாக ஆய்வாளர் மகிதா அன்ன கிறிஸ்டி மீது பணம் பறித்தல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல்துறை அவரை தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த ஆய்வாளர் மகிதா அன்ன கிறிஸ்டியை பொன்னேரி அருகே கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.