உயர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றது போல போலி உத்தரவு தயாரித்து மோசடி..!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்திலுள்ள ரங்கம்மாள் அறக்கட்டளையானது, 1969 -ஆம் ஆண்டில் திரு. ஜே. கே. கே. நடராஜா என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வறக்கட்டளையின் கீழ் பொறியியல், மருந்தக கல்லூரி, பல் மருத்துவகல்லூரி, செவிலியர் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேல்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி ஆகியவற்றை துவக்கப்பட்டு நடத்தி வருகிறது.

இந்த ரங்கம்மாள் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் அமல்ராஜ், சண்முகம், முருகானந்தம் ஆகியோர் வசித்து வந்தனர். இடத்தை காலி செய்யும்படி அறிவுறுத்தியும், அவர்கள் காலி செய்யாததால், அறக்கட்டளை நிர்வாகி செந்தாமரை, நாமக்கல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் செந்தாமரைக்கு சாதகமாக நாமக்கல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், நீதிமன்ற ஊழியர்கள் அவர்களை காலி செய்ய முற்பட்டுள்ளனர்.

அப்போது தங்களை காலி செய்யும்படி நாமக்கல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளதாகக் கூறி அதன் நகலை முருகானந்தம் கொடுத்துள்ளார். அந்த உத்தரவு போலியானது எனக்கூறி செந்தாமரை நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற பதிவாளரிடமும் புகார் அளிக்கப்பட்டது.

அதையடுத்து இது தொடர்பாக கடந்த 2022-ஆம் ஆண்டு அமல்ராஜ், சண்முகம், முருகானந்தம் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தது. போலியாக உயர் நீதிமன்ற உத்தரவு தயாரித்தது குறித்து சிறப்புக்குழு அமைத்து விசாரிக்க தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பது. அதன்படி இதுதொடர்பாக CBCID விசாரிக்க காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவு அனுமதி கொடுத்திருந்தார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் 7 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், 2 பேர் இறந்து விட்ட நிலையி்ல், மற்ற 2 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு உரிய முகாந்திரம் இல்லை எனக் கூறி நீதிபதிகள் விடுவித்தனர். பின்னர் அமல்ராஜ், சண்முகம், முருகானந்தம் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறி மூவருக்கும் தலா 6 மாதம் சிறை தண்டனை விதித்து, அவர்களை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளனர்.

போக்சோ சட்டத்தில் கைது செய்யக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே தட்டாங்குட்டை ஊராட்சிக்குட்பட்ட வி.மேட்டூர் பகுதியை சேர்ந்த இளம்பெண்கள் சிலரின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் முருகேசனை குமாரபாளையம் காவல்துறை கைது செய்தனர். இந்நிலையில் முருகேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்யக்கோரி நேற்று குமாரபாளையம் காவல் நிலையம் முன்பு வி.மேட்டூரை சேர்ந்த பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பூட்டிய வீட்டுக்குள் ஆண் பிணம்… கொலை செய்யப்பட்டாரா…?

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காட்டூர் விட்டலபுரி பகுதியில் ஒரு வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக குமாரபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. அதன் பேரில் குமாரபாளையம் காவல்துறை மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் அந்த வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது உள்ளே தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சுமார் 42 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது.

இதுகுறித்து காவல்துறை அந்த பகுதி பொது மக்களிடம் விசாரணை செய்தபோது, அந்த வீட்டிற்கு 5 மாதங்களுக்கு முன்பு ஒரு தம்பதியினர் குடிவந்தனர். அந்த ஆண் குடிப்பழக்கம் உள்ளவர் என்றும், அவரது மனைவி வெளியூர் சென்று விட்டதாகவும் தெரிகிறது. மேலும் கடந்த 5 நாட்களுக்கு முன்பு அவர் ரத்த காயங்களுடன் வீட்டுக்கு வந்தார். அப்போது வாலிபரிடம் அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினர். அதற்கு அவர் நான் காலையில் போகிறேன் என்று கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றார்.

இதையடுத்து அந்த வீட்டில் இருந்து உடல் துர்நாற்றம் வீசியது. இதுபற்றி அருகில் இருந்தவா்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், அப்பகுதி மக்கள் கொலை செய்யப்பட்டாரா… என சந்தேக படுகின்றனர்.