யானையின் வயிற்றில் 15 மாத குட்டி… சானிடரி நாப்கின் உள்ளிட்ட பிளாஸ்டிக் குப்பைகள் ..!

மருதமலை வனப்பகுதியில் உயிரிழந்த யானையின் வயிற்றில் 15 மாத ஆண் யானைக் குட்டி முழு வளர்ச்சி அடைந்த நிலையில், கிலோ கணக்கிலான முகக் கவசம், காலியான பால் பாக்கெட், சாம்பார் பொடி பாக்கெட், பிஸ்கட் கவர், சானிடரி நாப்கின், பெண்கள் தலைமுடியை கட்டும் பேண்ட் என பிளாஸ்டிக் குப்பைகள் இருப்பதும் கண்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது உணவு, குடிநீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கும், தோட்டங்களுக்கும் வருவது வாடிக்கையாக உள்ளது. சமீபகாலமாக இவ்வாறு ஊருக்குள் வரும் யானைகள் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை உண்பதும் வழக்கமாகி விட்டது.

கோயம்புத்தூர் மருதமலை அடிவாரத்தில் பெண் காட்டு யானை ஒன்று உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித் திரிந்தது. இதையடுத்து, வனத் துறையினர் மே 17 -ஆம் தேதி முதல் யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். அப்போது உடனிருந்த குட்டி யானை அவ்வப்போது தாய் யானையை எழுப்ப முயற்சித்துக் கொண்டு இருந்தது. தொடர்ந்து தாய் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், குட்டி யானை வனப் பகுதிக்குள் சென்றுவிட்டது.

மருத்துவக் குழுவினர், வனத் துறையினர் கடந்த நான்கு நாட்களாக அங்கேயே முகாமிட்டு தாய் யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். யானையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் முதல் முறையாக பாதிக்கப்பட்ட யானைக்கு நேற்று ஹைட்ரோ தெரபி மூலம் சிகிச்சை அளிக்க வனத்துறை மருத்துவ குழுவினர் முடிவு செய்தனர்.

ஐந்து கால்நடை மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். பாதிக்கப்பட்ட யானைக்கு காது நரம்பு மூலம் மருந்துகள் மற்றும் குளுக்கோஸ் அளிக்கப்பட்டது. ஹைட்ரோ தெரபி சிகிச்சை அளிக்கும் வகையில், வனப் பகுதியில் தற்காலிக குட்டை அமைக்கப்பட்டு அதில் 18 ஆயிரம் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்பட்டது. பின்னர், பொக்லைன் மூலமாக யானையை தண்ணீருக்குள் இறக்கி சிகிச்சை அளிக்கப்பட்டது.

கடந்த நான்கு நாட்களாக சுமார் 100 பாட்டில் குளுக்கோஸ் யானைக்கு ஏற்றப்பட்டு மருத்துக் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். யானையின் உடலிலும் தண்ணீர் அடிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று அந்த காட்டு யானை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த பெண் யானைக்கு இன்று பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், யானையின் வயிற்றில் 15 மாதங்கள் நிரம்பிய நன்கு வளர்ச்சியடைந்த ஆண் யானை உயிரிழந்த நிலையில் இருந்தது தெரிய வந்துள்ளது. மேலும், கிலோ கணக்கிலான அடைந்த நிலையில், கிலோ கணக்கிலான முகக் கவசம், காலியான பால் பாக்கெட், சாம்பார் பொடி பாக்கெட், பிஸ்கட் கவர், சானிடரி நாப்கின், பெண்கள் தலைமுடியை கட்டும் பேண்ட் என பிளாஸ்டிக் குப்பைகள் இருப்பதும் கண்டறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.