குப்பை எடுக்கலையா.. இந்த குப்பையை பரிசாக வைத்துக்கொள்..!

குப்பைகள் நீண்ட நாட்களாகியும் அகற்றப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், நகராட்சித் தலைவர் நித்தியா மனோகர் மற்றும் ஆணையர் பாரதிக்கு குப்பைகளை பார்சலாக பரிசளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம், கருமத்தம்பட்டி நகராட்சிப் பகுதியில் வீதிகளில் குப்பைகள் குவிந்து காணப்படுகின்றன.

இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும், இங்கு தூய்மைப் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக கடந்த ஜனவரியில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

ஆனாலும், அப்பகுதியில் குப்பைகள் அகற்றப்படாமலேயே இருந்துள்ளது. இப்பிரச்சினை தொடர்ந்து வந்ததால் கருமத்தம்பட்டி நகராட்சிப் பொதுமக்கள் தங்கள் பகுதியிலிருந்து குப்பைகளை சேகரித்து, பரிசுப் பொருளை சுற்றிவைக்கும் காகிதத்தில் சுற்றி, நகராட்சி தலைவர் மற்றும் ஆணையருக்கு பரிசாக வழங்கியாதல் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

தாராபுரத்தில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளால் தொற்று நோய்கள் பரவியதால் அபாயம்..!

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் சாலையோரம் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. குறிப்பாக காமராஜபுரம், இறச்சிமஸ்தான் நகர், அரசு ஊழியர் ஆகிய பகுதிகள் நகராட்சி ஒன்றாவது வார்டு பகுதியில் உள்ளது. இங்கு 3000-க்கும் மேற்பட்ட குடும்பம் வசித்து வருகின்றனர்.

இங்கு வசிக்கும் பொதுமக்கள் அன்றாட வேலைக்கும் மற்றும் இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்போர் செல்லும் முக்கிய சாலையான காலனிகளுக்கும், பைபாஸ் சாலைக்கும் இணைப்பு பாதையாக உள்ள பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலையில் அருகே 20-அடி சாலையில் 17-அடி அளவிற்கு சாலையை ஆக்கிரமித்து அதிக அளவில் குப்பைகள் மலை போல் குவிந்து காணப்படுகிறது.

இவ்வாறு குவிந்து கிடக்கும் குப்பைகள் காரணமாக கடும் துர்நாற்றம் வீசி காணப்படுவதோடு, அந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு காய்ச்சல் வாந்தி வயிற்றுப்போக்கு தோல் அலர்ஜி வைரஸ் ஃபீவர் போன்ற பல்வேறு உடல் உபாதைகள் அப்பகுதி மக்களுக்கு பலருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த வழியே சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள், துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லும் நிலையே உள்ளது. மேலும், சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை அங்கு சுற்றித் திரியும் மாடுகள், நாய்கள் போன்றவை கிளறி விடுவதால் சாலை முழுவதும் குப்பைகள் சிதறி அந்த பகுதியே அலங்கோலமாக காட்சியளிக்கிறது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளர் நகராட்சி திமுக நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன் மற்றும் திமுக ஒன்றாவது வார்டு கவுன்சிலர் ராஜேந்திரன் ஆகியோர் இடத்தில் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் குப்பை கொட்டும் இடத்தின் அருகிலேயே

பிரபல தேவாலயம் மற்றும் வழிபாட்டு தளங்கள் அமைந்துள்ளது. அங்கு வரும் மக்களும் மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இதுபோன்று கடந்த 11 மாதமாக மலை போல் குப்பைகள் குவிந்து தொடர்ந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் அந்த பகுதியில் மேலும் கொடிய தொற்று நோய்கள் பரவும் அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.

எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, சாலையோரம் அலட்சியமாக குப்பைகளை கொட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், அங்கு மலைபோல் தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்ற ஆசிரியர் தெரிவிக்கையில், நகராட்சி நிர்வாகத்திடம் மற்றும் ஒன்றாவது வார்டு கவுன்சிலரிடம் இது பற்றி தெரிவித்தோம். ஆனால் அதிகாரிகளோ அரசியல் தலைவர்களோ எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை, மேலும் தற்போது மழைக்காலம் என்பதால் குப்பைகளில் புழு உற்பத்தியாகி அது வீடுகளுக்குள் செல்கின்றது மேலும் பிளாஸ்டிக் கவர்களில் மழைநீர் தேங்கி டெங்கு காய்ச்சலை வர வைக்கக்கூடிய ஏ.டி.எஸ். கொசுக்கள் உற்பத்தி ஆகிறது.

மேலும் அப்பகுதியில் உள்ள காலி மனை இடங்களை கம்பி வேலி அமைக்க வேண்டும் அவ்வாறு அமைத்தால் பொதுமக்கள் குப்பை கொட்டாதவாறு தடுக்க முடியும். மேலும் அப்பகுதியில் தினந்தோறும் குப்பை எடுப்பதற்கு ஆட்கள் வரவேண்டும் குப்பை கொட்டுவதற்கு என தனி இடம் ஒதுக்கி அதற்கு மக்கும் குப்பை மக்காத குப்பை என இரண்டு குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும் ஆனால் விளம்பரத்திற்காக மட்டுமே செயல்படும் நகர் மன்ற தலைவர் பல்வேறு இடங்களை ஆய்வு செய்து நகராட்சி தூய்மையுள்ள நகராட்சியாக உள்ளது என தெரிவித்து வருகிறார். ஆனால் அவர் வார்டு பகுதிக்கு அருகே உள்ளது எங்களது வார்டு ஆனால் குப்பையை கூட அவரால் அகற்ற முடியவில்லை என இவ்வாறு தெரிவித்தார்.

சென்னையில் மூன்றே நாட்களில் 14 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்

சென்னை கனமழை எதிரொலி சென்னை மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் இரவு பகலாக பணியாற்றி கடந்த மூன்று நாட்களில் 14,493 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் 14-ஆம் தேதி 4,967 மெட்ரிக் டன், 15-ஆம் தேதி 4,585 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. அதபோல், சென்னையில் 16-ஆம் தேதி 4,941 மெட்ரிக் டன் குப்பைகள் என மொத்தம் 14,493 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

பொது இடங்களில் குப்பை கொட்டும் நபரா நீங்கள் இனி உஷார் ..! டிஜிட்டல் கருவி மூலம் அபராதம்..!

நாள்தோறும் சென்னை மாநகராட்சி பகுதிகளில் 7 ஆயிரம் டன் வரையிலான குப்பைகள் அகற்றப்படுகிறது. இதில், பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் விதிகளை மீறி கட்டிட கழிவுகள் மற்றும் குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையில் அபராதத் தொகை ரூ.500-ல் இருந்து ரூ.5 ஆயிரமாக கடந்த மாதம் மாநகராட்சி உயர்த்தியது.

இத்தனை தொடர்ந்து கடந்த 10 நாட்களில் மட்டும் பொது இடங்களில் விதிகளை மீறி குப்பை கொட்டிய நபர்களுக்கு ரூ.2½ லட்சம் வரையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அபராதத் தொகை விதிக்கும் நடைமுறையை டிஜிட்டல் மயமாக்க மாநகராட்சி திட்டமிட்டது.

அதன்படி, முதல்கட்டமாக 500 கருவிகளை போக்குவரத்து காவல்துறை அபராதம் விதிக்க பயன்படுத்தும் கருவி போல் டிஜிட்டல் கருவியை மாநகராட்சி சோதனை முறையில் பயன்படுத்தி வருகிறது. இந்த கருவிகள் 15 மண்டலங்களில் வழங்கும் பணி ஓரிரு நாட்களில் தொடங்கப்பட உள்ளது. டிஜிட்டல் முறையில் அபராதம் விதிக்கும் நடைமுறை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தெரிய வருகிறது.

சென்னை மாநகராட்சி அறிவிப்பு: பொது இடங்களில் குப்பை கொட்டினால் இனி ரூ.5,000 அபராதம்..!

சென்னை மாநகராட்சி வெளியிட்டசெய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக பொது இடங்களில் குப்பை, கட்டிட கழிவுகளை கொட்டுவது மற்றும் திடக்கழிவு மேலாண்மையை சரியாக பின்பற்றாதது போன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது திடக்கழிவு மேலாண்மை விதிகளின் அடிப்படையில் மாநகராட்சியால் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பொது இடங்களில் குப்பை, கட்டிட கழிவுகளை கொட்டுவதை தவிர்க்கவும், திடக்கழிவு மேலாண்மை செயல்பாட்டை மேம்படுத்தவும் கடந்த 5 ஆண்டுகளாக அமலில் இருந்து வந்த அபராத தொகை தற்போது திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொது மற்றும் தனியார் இடங்களில் தூக்கி எறியப்படும் குப்பை, வாகனங்களில் இருந்து குப்பை கொட்டுதல் உள்ளிட்டவைகளுக்கு அபராதம் ரூ.500-ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல தனிநபர் இல்லங்களில் தரம் பிரிக்காமல் வழங்கப்படும் கழிவுகளுக்கு ரூ.100-ல் இருந்து ரூ.1,000 ஆகவும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.5,000 ஆகவும் அபராதம் விதிக்கப்படஉள்ளது.

அங்கீகரிக்கப்படாத பொது இடங்களில் கட்டுமான கழிவுகளை கொட்டுபவர்களுக்கும் கழிவுநீர் கால்வாய்கள், நீர்நிலைகளில் குப்பை கொட்டுவோருக்கும் தனியார் மற்றும் பொது இடங்களில் திடக்கழிவுகளை எரிப்போருக்கும் அபராத தொகை ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மரக்கழிவுகளை கொட்டினால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும்.

இதுதவிர மீன் வளர்ப்பு, இறைச்சி கழிவுகளை தரம் பிரிக்காமல் கொடுப்பவர்களுக்கு ரூ.5,000,கடை வியாபாரிகள், விற்பனையாளர்கள் குப்பை தொட்டி வைக்கவில்லை என்றால் ரூ.1,000, குப்பைகளை தரம் பிரித்து வழங்காவிட்டால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும். மேலும் பொது நிகழ்ச்சிகள் நடந்த இடங்களில் 12 மணி நேரத்துக்குள் தூய்மைபடுத்தாமல் இருந்தால் ரூ.5 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படும்.

எனவே பொதுமக்கள் சென்னைமாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தங்களது வீடுகள், கடைகளில் குப்பை சேகரிக்க வரும் தூய்மை பணியாளர்களிடம் குப்பையை முறையாக மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து வழங்க வேண்டும். கட்டுமான கழிவுகளை அதற்கென நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களில் கொட்ட வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்படுள்ளது.

மாநகராட்சி ஆணையர் அதிரடி: கால்வாய்களில் குப்பை கொட்டியவர்களுக்கு 2 லட்சம் அபராதம்

வடகிழக்கு பருவமழை முன்னிட்டு முன்னெச்சரிக்கையாக தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் நான்காவது மண்டலம் கொடுங்கையூர் கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய், வியாசர்பாடி கால்வாய், ஜவகர் கால்வாய் மற்றும் இணைப்பு கால்வாய் ஆகிய கால்வாய்களில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனைத்தொடர்ந்து கால்வாய்களில் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் படி, மாநகராட்சி ஆணையர் அவர்களால் உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து வடக்கு வட்டார துணை ஆணையர் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இக்குழு நான்காவது மண்டல அலுவலர் தலைமையில் நேற்று கால்வாய்களை ஒட்டியுள்ள பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டது.

சோதனையில் கால்வாய்களில் குப்பை கொட்டிய வீடுகள், கடைகள் மற்றும் வணிக நிறுனங்கள் ஆகியவற்றிற்கு ரூ.2,05,000 அபராதம் விதிக்கப்பட்டது. கால்வாய்களில் குப்பைகளை கொட்டி நீர்நிலைகளின் ஒட்டத்திற்கு தடை ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.