தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்று வரும் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரை குடியாத்தம் உட்பட்ட பகுதிகளில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை குடியாத்தம் நகர பாஜவினர் செய்திருந்தனர். குடியாத்தம் நேதாஜி சிலை சந்திப்பு முதல் பஸ் நிலையம் வரையில் நடை பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சாலையின் இருபுறமும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியின் ராட்சத பேனர் மற்றும் கொடிகளுடன் கம்பங்கள் நடப்பட்டது. இந்நிலையில், குடியாத்தம் நகர பாஜகவினர், அண்ணாமலை நடை பயணம் நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கு நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் ரூ.20 லட்சம் வரை நன்கொடையாக பெற்றுள்ளார்களாம்.
இதற்கிடையில் பாஜக நகர நிர்வாகிகள், நகர தலைவர் சாய் ஆனந்தனிடம் வசூல் செய்த நன்கொடை தொகையை பிரித்து வழங்குமாறு கேட்டுள்ளனர். இதற்கு நகரத்தலைவர் மாவட்டம், மாநில நிர்வாகிகளிடம் பணத்தை ஒப்படைத்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் பாஜகவினர் வாட்ஸ் அப் குழு மற்றும் முகநூலில் பணம் வசூல் செய்தது சம்பந்தமாக ஒருவரை ஒருவர் தாக்கி பதிவு செய்து வருகின்றனர். நகைக்கடை அதிபர்களிடம் வசூல் வேட்டை நடத்தியது கட்சியினர் மூலமே அம்பலமாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.