Rahul Gandhi: குடியரசுத் தலைவரை ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கவிடாமல் தடுத்தனர்..!

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டம் பஸ்தாரில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பழங்குடியினராக இருப்பதால் அயோத்தி பால ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கவிடாமல் பாஜகவினரால் தடுக்கப்பட்டார். இது பாஜகவின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது.

பழங்குடி மக்களை நாம் ஆதிவாசி என்று பன்னெடுங்காலமாக அழைத்து வருகிறோம். ஆனால் ஆதிவாசி என்ற வார்த்தையை மாற்ற பிரதமர் நரேந்திர மோடி முயன்று வருகிறார். நாங்கள் உங்களை ஆதிவாசிகள் என்கிறோம், ஆனால் அவர்கள் ‘வனவாசி’ என்ற சொல்லை பயன்படுத்துகிறார்கள். வனவாசி மற்றும் ஆதிவாசி சொற்களுக்கு இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது என்பதை நீங்கள் உணரவேண்டும்.

ஆதிவாசி என்றால் நீர், வனம், நிலத்தின் மீது உரிமை உள்ளவர்கள் என்று அர்த்தம். ஆனால் வனவாசி என்றால் காட்டில் மட்டுமே வசிப்பவர்கள் என்று அர்த்தமாகிறது. பழங்குடி மக்களின் வரலாறு, மதம், கொள்கைகள் ஆகியவற்றின் மீது பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றனர் என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

தொல். திருமாவளவன் கேள்வி: பிரதமருக்கு அரசமைப்புச் சட்டத்தையேனும் மதிக்க வேண்டும் என்பதுகூட தெரியாதா..!?

பாஜக மூத்த தலைவர் அத்வானியின் வீட்டிற்கு நேரில் சென்று பாரத ரத்னா விருதை ஜனாதிபதி திரவுபதி வழங்கினார். விருது வழங்கும் போது பிரதமர் நரேந்திர மோடி அமர்ந்து இருந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி அதற்கு பல்வேறு தரப்பினர் கண்டம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் பக்கத்தில், பிரதமர், மேனாள் துணை பிரதமர் ஆகியோருக்கு தேசத்தின் முதல் குடிமகவான குடியரசுத் தலைவரை எங்ஙனம் மதிக்க வேண்டும் என்பது தெரியாதா?.

தேசத்தின் தலைமை, குறிப்பாக அரசின் தலைமை, குடியரசுத் தலைவர் தான் என்பதை வரையறுத்துக் கூறும் அரசமைப்புச் சட்டத்தையேனும் மதிக்க வேண்டும் என்பதுகூட தெரியாதா? இந்த அவமதிப்பு- இவர் பெண்மணி என்பதாலா? அல்லது இவர் பழங்குடி என்பதாலா? அல்லது அரசமைப்புச் சட்டம் ஒரு பொருட்டில்லை என்பதாலா? இப்படியொரு படம் வெளியானது அறியாமல் நிகழ்ந்ததா? திட்டமிட்டே நடந்ததா? குடியரசுத் தலைவரை நிற்கவைத்து படம்பிடித்து வெளியிடுவது என்னவகை பண்பாடு? பெரும் அதிர்ச்சியளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.