திருப்பூரில் இரவு 11 மணிக்கு டேங்க் மீது 2 பேர்.. குடிநீர் தொட்டியில் மலம் கலப்பா..!?

திருப்பூரில் இரவு 11 மணிக்கு டேங்க் மீது 2 பேர் ஆசாமிகள் .. மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்ததாக வந்த தகவலால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாநகராட்சி 6-வது வார்டு கவுண்டன்நாயக்கன்பாளையம் பகுதியில், 17 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 30 அடி உயர குடிநீர் தொட்டி குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் இந்த குடிநீர் தொட்டி கட்டப்பட்டு, பயன்பாட்டிலும் இருந்து வருகிறது. இங்கு 2 காவலாளிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்..

இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு 11 மணிக்கு தொட்டியின் உச்சியில் சிலர் உட்கார்ந்து இருந்தனர்.. ஆனால், பொதுமக்களை பார்த்ததும் அந்த இளைஞர்கள் தப்பியோடி விட்டனர். இதனால் சந்தேகமடைந்த பொதுமக்களில் சிலர், தொட்டியின் மேல் பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு பால் பாக்கெட், செய்தித்தாள்கள் கிடந்திருக்கின்றன. இதுகுறித்து பொதுமக்கள் சிலர், திருப்பூர் வடக்கு காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

அதற்குள் குடிநீர் தொட்டியில் மலம் கலந்து விட்டதாக அப்பகுதியினர் மத்தியில் தகவல் காட்டுத்தீயாய் பரவியதால், ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இதையடுத்து, அதிகாரிகளும், காவல்துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாநகராட்சி இரண்டாவது மண்டலக்குழு தலைவர் கோவிந்தராஜ், வார்டு கவுன்சிலர் கோபால்சாமி ஆகியோர், மேல்நிலைத் தொட்டி வளாகத்தை பார்வையிட்டனர்.

வேங்கைவயல் விவகாரம்: ஜாதி காரணம் அல்ல… தனி மனித பிரச்சினையே காரணம்..!

“வேங்கைவயல் விவகாரத்துக்கு சாதி மோதலோ.., அரசியல் காழ்ப்புணர்ச்சியோ காரணம் அல்ல. இருவர் இடையே ஏற்பட்ட தனி மனித பிரச்சினையே காரணம்” என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திருமங்கலத்தை சேர்ந்த கண்ணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் 2 ஆண்டுக்கு முன்பு மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக CBCID இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. விசாரணையில் முன்னேற்றம் இல்லை. எனவே, வேங்கைவயல் சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும்,” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, வேங்கைவயல் வழக்கு குறித்த முழுமையான அறிக்கையைத் தாக்கல் செய்தார். பின்னர் அவர் வாதிடுகையில், “வேங்கைவயல் விவகாரத்தில் சாதிய மோதலோ, அரசியல் காழ்ப்புணர்ச்சியோ கிடையாது. இருவர் இடையே ஏற்பட்ட தனி மனித பிரச்சினையே காரணம். கடந்த 2 வருடங்களாக இந்த வழக்கை CBCID விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கில் 3 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் CBCID மொத்தம் 389 சாட்சிகளிடம் விசாரனை நடத்தினர். 196 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதில் உள்ள எண்கள் ஆய்வு செய்யப்பட்டன. மேலும் 87 டவர் லொகேஷன் ஆய்வு செய்யப்பட்டு அதிலிருந்து புள்ளி விவரங்கள் எடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில் 31 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் இருந்த அழிக்கப்பட்ட புகைப்படம், வீடியோ ஆதாரங்கள், நிபுணர் குழுக்களால் மீட்கப்பட்டு அறிவியல் ஆய்வக அறிக்கைக்கு அனுப்பப்பட்டது.

அதேபோல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குற்றவாளிகளால் எடுக்கப்பட்ட செல்ஃபி புகைப்படங்கள், அங்கிருந்தபடி தொடர்பு கொண்டு பேசிய செல்போன் எண்கள் என அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. குற்றவாளிகள் மற்ற நபர்களிடம் பேசிய ஆடியோக்கள் எடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்களிடம் குரல் மாதிரிகள் எடுக்கப்பட்டு அனைத்தும் அறிவியல் பூர்வ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதில் பேசிய நபர்களின் ஆடியோக்கள் அனைத்தும் உண்மையானது என உறுதி செய்யப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தண்ணீர் தொட்டிக்கு ஏறும் வரை தொட்டியில் எந்த கழிவுகளும் கலக்கப்படவில்லை என்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. சரியாக இரவு 7.35 மணிக்கு மேல் தான் கழிவு கலக்கப்பட்டுள்ளது. கழிவு கலக்கப்பட்ட தண்ணீர் யாருக்கும் விநியோகம் செய்யப்படவில்லை என்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நேரம் வாரியாக ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளன. தற்போது வழக்கின் விசாரணை முடிந்து விசாரனை நீதிமன்றத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணை நீதிமன்றம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்,” என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்தார்.