குடிநீர் கட்டணம், பாதாளச் சாக்கடை மற்றும் இணைப்பு கட்டண உயர்வுகளுக்கு எதிராக கோயம்புத்தூர் மாநகராட்சி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 (1999ம் ஆண்டு சட்டம்) பிரிவு 199(2)ன் கீழ் புதிதாக உருவாக்கியுள்ள துணை விதிகளின் அடிப்படையில், கோயம்புத்தூர் மாநகராட்சியில், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்புக்கான வைப்புத்தொகை மற்றும் மாதாந்திர கட்டணம் உயர்த்தப்படும்.
அக்கட்டணம் செலுத்தாவிட்டால், அபராதம் விதிக்கப்படும். இனி, ஆண்டுதோறும், 3 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படும்’ என, மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. மேலும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 (1999ம் ஆண்டு சட்டம்) பிரிவு 199(2)ன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளின் படி, துணை சட்டங்கள் மற்றும் விதிமுறைகளில் அபராதம் விதிக்கவும், கோயம்புத்தூர் மாநகராட்சி மாமன்றத்தில் உத்தரவிடலாம்.
இந்த துணை விதிகள், தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கும் நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் ஒப்புதலுடன் ஏற்படுத்தப்பட்ட குழுவால் பொதுவானதாக இயற்றப்பட்டவை என, தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இத்தீர்மானங்கள் பற்றி முழுமையாக அறியாமலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், – இந்திய கம்யூனிஸ்ட், கொமதேக உள்ளிட்ட கவுன்சிலர்கள், விவாதம் செய்யாமல் நிறைவேற்றி விட்டனர். சொத்து வரி உயர்வால், ஏற்கனவே பொதுமக்கள் கஷ்டத்தில் இருக்கும் சூழலில், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் கட்டணங்களை ஒரே நேரத்தில் உயர்த்தியிருப்பது, கோயம்புத்தூர் மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், குடிநீர் கட்டணம், பாதாளச் சாக்கடை இணைப்பு கட்டண உயர்வுகளுக்கு எதிராக, கோயம்புத்தூர் மாவாட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கோயம்புத்தூர் மாநகராட்சி முன்பு மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்த முற்றுகைப் போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிள், மற்றும் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டு தோழர்கள் கலந்து கொண்டனர்.