திருச்சியில் 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பால் 2-வது நாளாக பதட்டம்..!

திருச்சி உறையூர் 10 -வது வார்டு பகுதியில் வயிற்றுப்போக்கு வாந்தி காரணமாக 4 வயது சிறுமி உட்பட 3 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். மேலும், ஐம்பதுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட உறையூர் மின்னப்பன் தெரு , பணிக்கன் தெரு, காமாட்சி அம்மன் தெரு. நெசவாளர் தெரு, காளையன் தெரு உள்ளிட்ட பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீரில் கழிவு நீர் கலந்தது போன்று குடிநீர் வந்ததாக கூறப்படுகிறது. இதனை அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கூறியும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகின்றது.

இந்நிலையில்,கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான சுமார் 50-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து இவர்களை திருச்சி அரசு மருத்துவமனை, மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3 வயது பெண் குழந்தை பிரியங்கா மற்றும் லதா, மருதாம்பாள் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் உறையூர் பகுதியில் பதட்டமும் பரபரப்பும் உண்டானது. அந்தப் பகுதி மக்கள் கழிவு நீர் கலந்த குடிநீரை பாட்டிலில் பிடித்தவாறு நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். மேலும் அப்பகுதியில் 6 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதற்கட்ட மருத்துவ ஆய்வில் குடிநீர் மூலம் தொற்று ஏதும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி, குடிநீர் குழாயில் கசிவு ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் எந்திரங்கள் கொண்டு குடிநீர் விநியோகம் செய்யும் பிரதான குழாயில் ஆங்காங்கே ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் தொடர்ந்து 2-வது நாளாக அப்பகுதியில் பதட்டம் நிலவி வருவதால் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க அங்கு கூடுதல் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கலில் ரத்த கலரில் வந்த குடிநீர்..!!

நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் சாய பட்டறைகள் அதிக அளவில் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இதன் கழிவுகள் நிலத்தடி நீரில் கலந்ததால், குடிநீர் ரத்த நிறத்தில் மாறியுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் போர்வேல் நீரை அப்பகுதிகள் மக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சமீப நாட்களாக இந்த நீரின் நிறம் மாறிக் கொண்டே வந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று இந்நீர் ரத்த நிறத்தில் வந்ததை கண்ட மக்கள் அச்சம் அடைந்தனர்.

பாலாறு குடிநீர் தங்களுக்கும் வேண்டும்… வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை..!

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் பெரும்பேடு கிராமம் உள்ளது. இந்த கிராம மக்கள், தங்கள் பகுதிக்கு பாலாற்றில் இருந்து குடிநீர் வழங்க வேண்டும் என திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல முறை கோரிக்கை மனு அளித்தனர். இந்நிலையில் அருகில் உள்ள பாண்டுர் ஊராட்சி பாலாற்று கரையிலிருந்து சுமார் 4 கி.மீ. தூரத்துக்கு குழாய்கள் அமைத்து பெரும்பேடு கிராமத்திற்கு பாலாறு குடிநீர் கொண்டுவர மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்கு பாண்டுர் ஊராட்சி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பணிகள் நடைபெறவிடாமல் தடுத்தாக கூறப்படுகிறது. இதனால் டெண்டர் விடப்பட்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், நேற்று பெரும்பேடு கிராமத்திற்கு பாலாற்றில் இருந்து குடிநீர் வழங்க பணிகளை தொடங்க கோரி கிராம மக்கள் செங்கல்பட்டு மாவட்ட வி.சி.க. செயலாளர் கனல்விழி தலைமையில் திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலக வாசலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் கோமதி பெருமாள் புறக்கணித்து விட்டு கிராம மக்களுடன் சோ்ந்து ஆர்ப்பாட்டம் செய்தார்.

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் தர்ணா..!

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் நாரைக்கிணறு ஊராட்சி நேரு நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாய மற்றும் பல்வேறு கூலி வேலைகளுக்கு செல்கின்றனர். இந்நிலையில் நேரு நகரில் கடந்த 2 வருடங்களாக தண்ணீர் வினியோகம் இல்லாமல் அவதிபட்டு வருகின்றனர். இதனால் தண்ணீருக்காக 2 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்லும் நிலை உள்ளது.

மேலும் குடிநீர் வண்டி ரூ.500 வரை கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே கூலி வேலைக்கு செல்வதால் குடிநீரை பணம் கொடுத்து வாங்க முடியாத நிலை உள்ளதாகவும், குடிநீர் ஏற்பாடு செய்து தர வலியுறுத்தியும் நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நேரு நகரை சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.